தென்காசி தொகுதி… மறு வாக்கு எண்ணிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Monisha

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து பழனி நாடாரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,

“தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எனவே, தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர், 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை : நாய்கள் விஷம் வைத்து கொலை!

“ஆளுநர் அரசியல் பேசக்கூடாது”: அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment