சிஏஜி அறிக்கையை படித்திருக்கிறீர்களா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

அரசியல்

சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லியிருக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி செல்வராஜ் இல்ல திருமண விழாவில் இன்று (ஆகஸ்ட் 27)  கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சிஏஜி அறிக்கையின் மூலம் மோடி அரசின் ஊழல் அம்பலமாகியிருக்கிறது. ஊழல் எதிர்ப்பு பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று கூறியிருந்தார்.

சிஏஜி அறிக்கை – ஊழல் இல்லை!

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டை அப்படியே படித்துவிட்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர்.

சிஏஜி அறிக்கையால் மத்திய அரசின் ஏழு விதமான ஊழல் அம்பலமாகியிருக்கிறது என்று அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார். சிஏஜி அறிக்கையை இதற்கு முன் எப்போதாவது படித்துப் பார்த்திருப்பாரா முதலமைச்சர் என்ற கேள்வி எழுகிறது.

சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு மோசடி அல்லது முதல்வர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

14 வழிச் சாலையில், 8 வழி மேம்பாலமாகவும், 6 வழி விரைவுச் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதால் செலவினம் அதிகரித்துள்ளது என்பது சிஏஜி அறிக்கையிலேயே இருக்கிறது.

எதற்காக இந்த மாறுதல் என்பதுதான் சிஏஜி அறிக்கையின் கேள்வியே தவிர, ஊழலோ முறைகேடோ நடந்துள்ளது என்று அறிக்கையின் எந்தப் பக்கத்திலும் கூறப்படவில்லை.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், சாலைகள் அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது தாமதமாவதால், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம் சாட்டினார்.

சாலை அமைப்பதற்கான மூலப் பொருள்களில் விலையுயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடமும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு, கேரளாவுக்கு அனுப்புவதில் திமுக அமைச்சர்களுக்கே தொடர்பு இருப்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு உதவாமல், கனிம வளங்களைத் திருடிக் கொண்டிருப்பவர்கள் மீது முதலமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

சுங்கச் சாவடியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். சுங்கச் சாவடிகளில் எப்படி ஊழல் நடக்கும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
உலக அளவில், ஊழலுக்கான அடையாளங்களாக விளங்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு, எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியும் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.
எனவே, சுங்கச் சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை.

மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில், தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும், சுங்கச் சாவடிகளிலும் இது போல வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“முதலமைச்சருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 2ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு மோசடி ,அரசுக்கு இழப்பு ஆகிய வார்த்தைகள் 2ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையில் தான் இருந்தது .

ஊழலின் அடையாளமான திமுக, ஊழலற்ற, மக்களுக்கான, நேர்மையான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரியா

பணி நேரத்துக்கு வராத மருத்துவர்கள் : அமைச்சர் முக்கிய உத்தரவு!

பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்: சீமான் அதிரடி!

 

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

1 thought on “சிஏஜி அறிக்கையை படித்திருக்கிறீர்களா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

  1. 2ஜி பற்றி மட்டும் அறிக்கை கொடுக்கும்போது மட்டும் அவங்க ஊழல்னு குறிப்பிட்டு இருந்தாங்களாம்; ஆனா இப்ப அந்த மாதிரி ஊழல்னு எங்கயும் சொல்லவே இல்லியாம். செலவு ஜாஸ்தி ஆயிருச்சினு மட்டும்தான் சொல்லி இருக்காகளாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *