போராட்டத்தை கைவிட்டேனா? சாக்‌ஷி மாலிக் விளக்கம்!

அரசியல் விளையாட்டு

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திலிருந்து நான் விலகியதாக பரவிய தகவல் பொய்யானது என்று சாக்‌ஷி மாலிக் இன்று (ஜூன் 5 ) விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்து ஹரித்வார் சென்றனர்.

அப்போது, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்வோம் என மல்யுத்த வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கிதா போகத், சத்யவார்ட் கடியன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அமித் ஷா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தசூழலில் இன்று (ஜூன் 5) போராட்டத்தை சாக்‌ஷி மாலிக் வாபஸ் பெற்றதாகவும், மீண்டும் ரயில்வே பணியில் சேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள சாக்சி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம்.

நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஏ.என்.ஐ ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில். “நாங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது உண்மைதான். இது ஒரு சாதாரண சந்திப்பு.

எங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அது, பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதுதான்.

நான் போராட்டத்திலிருந்து பின் வாங்கவில்லை, ரயில்வேயில் ஓஎஸ்டியாக எனது பணியை மீண்டும் தொடங்கினேன். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்ட அந்த மைனர் பெண் எந்த எஃப்ஐஆரையும் திரும்பப் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விபத்து பகுதிக்கு செல்லாதது ஏன்? உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி!

பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *