பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று அமித்ஷா கூறியது, முஸ்லிம் மக்கள் மீதான வன்மம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன் பதில்கள் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று (மே 2) கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கேள்வி: ஆளுநர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் சட்டமன்றத் தீர்மானம் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதே. உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறதே?
பதில்: கோடிக்கணக்கான மக்களுடைய பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்புகின்ற சட்ட மசோதாக்களை, ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால், அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது.
அதனால்தான், சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக என்னுடைய குரலுக்கு வலுசேர்த்த மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி.
அதேபோல, இன்னும் இருக்கின்ற மற்ற மாநில முதலமைச்சர்களும் இதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே?,
முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன?
பதில்: சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான வன்மம்தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது.
தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறு சொல்லி இருக்கிறார்.
இசுலாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பா.ஜ.க.-வினுடைய தலைமை அவர்களாகவே கற்பனை செய்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மை அப்படியில்லை. பா.ஜ.க.-விற்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான்.
ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள்.
பா.ஜ.க. தன்னுடைய வெறுப்புணர்ச்சியைக் குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய மனநிலை என்று காட்ட நினைக்கிறது.
பொய்களையும் கற்பனை கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிற பாஜக ஆதரவு கணக்குகள், பாஜக-வினுடைய ஊதுகுழலாக மாறி, ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண் என்பதை மறந்து, பாஜக-வை தாங்கி பிடிக்கிற ஊடகங்கள்.
இப்படி பல காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பரசியலை பாஜக செய்து கொண்டு இருக்கிறது. மதச்சார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற செயல். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.
மோனிஷா
கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் முக்கிய வாக்குறுதிகள் என்ன?