ஹத்ராஸ் சம்பவம் : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக ராகுல் கோரிக்கை!

Published On:

| By christopher

Hathras incident: Rahul Gandhi requests for the families of the victims!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 5) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா நடத்திய ஆன்மிக கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அலிகாரில் உள்ள பிலக்னா கிராமத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Image

டெல்லியில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர் சாலை மார்க்கமாக உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு பயணம் செய்தார். அவருடன் உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.

அரசியலாக்க விரும்பவில்லை!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களின் நிலைமையை புரிந்து கொள்ள விரும்பினேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. விழா ஏற்பாடு செய்யும் அமைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் என்பதால் அவர்களுக்கு அதிக இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது. உத்தரப்பிரதேச முதல்வரை மனம் திறந்து இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று ராகுல் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இந்த வார ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் இதோ!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share