பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா மீது 4 பிரிவுகளின் கீழ் இன்று (மார்ச் 20) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக சார்பில் அவர் மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, ” பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம்” என்று நேற்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார்.
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இந்தநிலையில் எந்தவித ஆதாரமுமின்றி தமிழர்கள் மீது அவதூறு தெரிவித்த ஷோபா மீது நடவடிக்கை எடுக்கும்படி மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் புகாரளித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட மதுரை காவல்நிலைய போலீசார், ஷோபா மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
முன்னதாக, தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், ”தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு நீடித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசியது இரு மாநிலங்களுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.
இது தேசிய ஒற்றுமையை, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்களை மத்திய அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தாமரை மலந்தே தீரும்” : பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை உறுதி!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்? – செல்வப்பெருந்தகை பதில்
Dhanush: நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தின் இசையமைப்பாளர் யார்?
Comments are closed.