இயற்கை பேரிடரில் விபத்துகள் சாதாரண விஷயம், இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி தொகுதியில் மழை நீரானது இடுப்பளவுக்கு தேங்கியுள்ளது.
வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா படகுகள் ஏற்பாடு செய்து மீட்பு பணியில் ஈடுபட்டார். மேலும், வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்தநிலையில், வேளச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
“வேளச்சேரி தொகுதியில் மழை நீர் வடிகால் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. அடையாறு, பக்கிங்காம் கால்வாய், வீராங்கல் ஓடை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆகியவை மழை நீர் வெளியேறும் பகுதிகள்.
தென் சென்னை தொகுதிகளில் உள்ள மொத்த மழை நீரும் வேளச்சேரி வழியாக தான் ஆறுகளில் கலக்கிறது.
ஆறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், மழை நீரை உள்வாங்கவில்லை. வெள்ள நீர் முழுமையாக வடிய 12 மணி நேரமாகும்.
தொகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் என்னுடைய தொலைபேசி எண் உள்ளது. அதனால் எந்த உதவி என்றாலும் என்னை தொடர்பு கொள்வார்கள்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ஐந்து பர்லாங் சாலை – வேளச்சேரி கேஸ் பங்க் விபத்தில் நான்கு பேர் பள்ளத்தில் சிக்கியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
“இவ்வளவு பெரிய மழை வரும் போது இதுபோன்ற விபத்துகள் நடக்கும். இயற்கை பேரிடரில் இதெல்லாம் சாதாரண விஷயம். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வேளச்சேரி ஏரி உயரத்தை அதிகரிக்கும் போது ஊருக்குள் தண்ணீர் வர தான் செய்யும். ஆறுகளில் தண்ணீர் அதிகளவில் இருப்பதால் உள்வாங்கவில்லை. இதனால் வேளச்சேரி பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கடலானது தண்ணீரை உள்வாங்கவில்லை என்றால் நாம் என்ன செய்வது? இதுக்கு மேல் எதுவும் பண்ண முடியாது” என்று கூறியிருந்தார்.
வேளச்சேரி மக்கள் வாக்களித்து வெற்றி பெறவைத்து எம்.எல்.ஏ.,வாக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் மௌலானா, இப்படி சர்வ சாதாரணமாக சொல்லியிருப்பது வேளச்சேரி தொகுதி மக்களை மட்டுமல்ல… ஆளுங்கட்சியான திமுகவினரையும் கோபப்பட வைத்துள்ளது.
வேளசேரியில் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நிவாரணப் பணிகளிலும் மீட்புப் பணிகளிலும் அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில் எம்.எல்.ஏ ஹசனின் இந்த கருத்தைப் பார்த்த திமுக புள்ளிகள், ‘இவரு மறுபடியும் இங்க நிக்கமாட்டாரு. வேற தொகுதியைத் தேடிப் போயிருவாரு.
அந்த தைரியத்துலதான் இப்படி பேசுறாரு. இவரையெல்லாம் தலைவருக்காக ஜெயிக்க வைச்சதுதான் நம்ம தப்பு” என்று வெளிப்படையாக புலம்பி வருகிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குழந்தை சிரிப்பை பார்த்ததும் களைப்பே தெரியவில்லை: காவலர் தயாளன்
மழை நிவாரணம்: பிரதமருக்கு ஆளுநர் நன்றி!