அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு இரண்டு முறை கூடியது. 2022 ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவராகத் தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி நடைபெற்றது. அன்றைய தினம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு நிலுவையிலிருந்தது.
இந்த வழக்கு இன்று (மார்ச் 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இந்த மனு காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஓபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என குறிப்பிடப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? எனக் கேள்வி எழுப்பி இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு வரும் மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரியா
மே 1 முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு: நிழல் பட்ஜெட்டில் பாமக
“நமக்கும் இயற்கைக்குமான புனிதப் பிணைப்பு”-ஆஸ்கர் தமிழ் குறும்பட இயக்குநர் கார்த்திகி