ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை வைத்திருக்கிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள்மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் நடந்துவருகிறது.
கடந்த வாரம் தொடர்ந்து 3நாட்கள் விசாரணை நடந்த நிலையில் இன்று(ஜனவரி 10) 4ஆவது நாளாக விசாரணை தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஜனவரி 6ஆம் தேதி தனது வாதங்களை நிறைவு செய்திருந்தது.
இந்தநிலையில் இன்று ஈபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதங்களை முன்வைத்து வருகிறார். அவர் தனது வாதத்தில், “கட்சியின் அடிப்படையை முதலில் நீதிமன்றம் புரிந்து கொள்ளவேண்டும்.
2017ஆம் ஆண்டுவரை கட்சிக்கு ஒரே தலைமை இருந்தது. அதிமுகவின் பொதுக்குழு, அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது. கட்சியின் விதிகளை திருத்தவும் அதிகாரம் கொண்டுள்ளது.
ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கிளை, நகரம், வட்டம், மாநகரம் ஆகியவற்றுக்கான கட்சித் தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு கிளையும் ஒரு செயலாளரைக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானது போல் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் காலாவதியாகவில்லை.
அதிமுக ஜனநாயக கட்சியாக இயங்கிவருகிறது. கட்சிக்கு உயர்அதிகாரம் படைத்த குழு தேவை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் முகமாகதான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டும் தொண்டர்களிடம் செல்லவேண்டும் என்று பன்னீர்செல்வம் ஏன் சொல்கிறார்.
முக்கிய இரண்டு பதவிகளை உருவாக்கியபோது தொண்டர்களிடம் செல்ல பன்னீர்செல்வம் ஏன் சொல்லவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கக்கூடிய முடிவை, அடிப்படை உறுப்பினர்கள் முடிவாகத்தான் பார்க்கவேண்டும்.
பொதுக்குழுவுக்கான அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அரியமா சுந்தரம் வாதங்களை வைத்து வருகிறார்.
கலை.ரா
ஆஸ்கர் விருது : இன்ப அதிர்ச்சி கொடுத்த காந்தாரா
மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரம்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!