டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் இமேஜ் உயர்ந்திருக்கிறதா?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில மீம்ஸ்களை அனுப்பித் தள்ளியது. ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையம் பற்றிய மீம்ஸுகள்தான் அவை. பார்த்து கொஞ்சம் புன்னகைத்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரண மர்மம் பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகிய இரு ஆணையங்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ராஜராஜன் இந்து சர்ச்சை, திமுக அமைச்சர்களின் பேச்சு சர்ச்சைகள், நயன் தாரா இரட்டை குழந்தை என எல்லா சர்ச்சைகளையும் பின்னுக்குத் தள்ளி கடந்த நான்கு நாட்களாக தமிழக மக்கள் மத்தியில் பேசு பொருளாகியிருப்பது இந்த இரு அறிக்கைகள்தான்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையமும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி அருணா ஜெகதீசன் ஆணையமும் சொல்லியிருக்கும் விஷயங்கள் சமூக தளங்கள் முதல் டீக்கடைகள், பெட்டிக் கடைகள், கோயில், குளக்கரை, வயக்காடு எங்கும் பேச்சாக இருக்கிறது.

.இந்த இரு அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்வமாக இருந்திருக்கிறார். இரண்டு, மூன்று தினங்களாக கோட்டையில் இருக்கும் முக்கிய அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் என்று தினந்தோறும் தன்னை நேரடியாக சந்திப்பவர்களிடம், ‘ஆறுமுகசாமி கமிஷன், அருணா ஜெகதீசன் கமிஷன் ரிப்போர்ட் பற்றி மக்கள் என்ன நினைக்கிறாங்க?’ என்று கேட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தினமும் முதல்வரை சந்திக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
‘சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துலயே நீங்க பேசும்போது, ‘அதிமுக ஆட்சியில இருக்கும்போதே ஜெயலலிதா மர்மமான முறையில இறந்திருக்காங்க. இருக்கும் மர்மத்தை அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் கண்டுபிடித்துச் சொல்லுவேன் அப்படினு பேசினீங்க. நீங்க சொன்னது போலவே ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்துல தாக்கல் பண்ணி மக்கள் பார்வைக்கும் கொண்டு வந்திருக்கீங்க.

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டது அவங்களோட பெரும் ஆதரவா இருந்த பெண்கள்தான். இன்னைக்கு இந்த அறிக்கை வெளியான பிறகு சசிகலா மட்டுமில்ல, ஒட்டுமொத்த அதிமுக பெரும்புள்ளிகள் எல்லாருமே ஜெயலலிதாவுக்கு துரோகம் பண்ணியிருக்காங்கனு அவங்க பேசிக்கிறாங்க. அதனால ஜெயலலிதாவுக்கு இருந்த பெண்கள் ஆதரவு இப்ப உங்களுக்கு கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.

‘ஸ்டாலின் தேர்தலப்ப பேசினது மாதிரியே ஜெயலலிதா மரண மர்மத்தை உடைச்சிட்டாரு’னு பெண்கள் எல்லாம் உங்களை (ஸ்டாலினை) சொல்றாங்க. அதிமுக தொண்டர்களும் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிட்டிருக்காங்க’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள் கோட்டை வட்டார உயர் அதிகாரிகள்.

இதுமட்டுமல்ல, ’அருணா ஜெகதீசன் ஆணையம் பற்றியும் மக்கள் காரசாரமாக பேசுறாங்க. மக்களை நிக்க வச்சி தலையிலயும் நெஞ்சுலயும் சுட்டுப் பொசுக்குன போலீஸ்காரங்களை மட்டுமில்ல, அதுக்குக் காரணமான எல்லாரையும் கூண்டுல ஏத்துவேன்னு சட்டமன்றத்துல நீங்க பேசினதை மக்கள் முழுசா நம்புறாங்க. உங்க இமேஜ் ரொம்ப பெரிய அளவுல தென் மாவட்டங்கள்ல உயர்ந்திருக்கு’ என்றும் சொல்லியிருக்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

மூத்த அமைச்சர்களிடமும் இந்த ஆணைய அறிக்கைகள் பற்றி கேட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது ஒரு மூத்த அமைச்சர், ‘தம்பீ… எம்ஜிஆருக்கு பெண்கள்கிட்ட இருந்த செல்வாக்கை நேரா பாத்தவன் நான். அதே செல்வாக்கு உங்களுக்கு இருக்கிறத என் கண்ணார பார்க்குறேன்.

நான் அரசு விழாக்களுக்கு போறப்ப, ‘தளபதி எப்படி இருக்காரு,. சிஎம் எப்படி இருக்காரு. அவர் உடம்பை பாத்துக்கச் சொல்லுங்க. ரொம்ப நல்லா ஆட்சி பண்றாருனு மனசு விட்டு சொல்றாங்க. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையில சொல்லியிருக்கிற விஷயங்களை பேப்பர தாண்டி அவனவன் செல்போன்ல டவுன்லோடு பண்ணி படிச்சிருக்கான். ஜெயலலிதாவுக்கு நீங்கதான் நீதி வழங்கியிருக்கீங்கனு படிச்சவங்க மத்தியில பேச்சா இருக்கு.

தூத்துக்குடி ஆணைய அறிக்கைய படிச்சு நாங்க அமைச்சர்களே ஷாக் ஆயிட்டோம். அன்னிக்கு உண்மையிலயே எடப்பாடிக்கு தெரியாமதான் நடந்திருக்கும்போலனு நாங்களே நினைச்சுக்கிட்டிருந்தோம். ஆனா… மக்களை சுடச் சொல்லிட்டு தனக்குத் தெரியாதுனு வேற பொய் சொல்லியிருக்காரு. அவர் ஒரு அண்டப் புளுகர்ங்குறதை அவர் நியமிச்ச ஆணையம் மூலமாவே மக்களுக்கு அம்பலப்படுத்திட்டீங்க. நிர்வாகத் திறமையில கலைஞரை விட நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சர்.

போலீஸ் அதிகாரிகளிடமும் கூட மக்களின் மைண்ட் வாய்ஸ் பற்றி விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர்களும், ‘பொதுக்குழுவுல நீங்க பேசின பேச்சை எதிர்க்கட்சிகள் கிண்டல் பண்ணினாங்க. ஆனா காமன் பீப்பிள்கிட்ட நீங்க பேசின பேச்சு உணர்வுபூர்வமா போய் சேர்ந்திருக்கு. ‘இவரு நல்லா ஆட்சி பண்றாரு. ஆனா சில மந்திரிங்கதான் இடைஞ்சல் பண்றாங்க. அதை கூட அதிகாரமா சொல்லாமல் தன்மையா சொல்லியிருக்கீங்கனு உங்க மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கு’ என்றும் சொல்லியிருக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

இப்படி கோட்டை வட்டார உயர் அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் என மூன்று தரப்பிலும், ‘தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உங்கள் (ஸ்டாலின்) இமேஜ் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது’ என்று சொல்லக் கேட்டு மகிழ்ந்து போயிருக்கிறார் முதல்வர்.

இதற்கிடையே அறிவாலயத்தில், ‘அந்த ஜெயலலிதா என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லைனு சொன்னாங்க. ஆனா உண்மையிலயே இப்ப உங்களுக்குத்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை. எலக்‌ஷனெல்லாம் தாண்டி பெரிய அளவுல மக்கள் உங்களைக் கொண்டாடுறாங்க’ என்று சீனியர் அமைச்சர் ஒருவர் சொல்ல, அதைக் கேட்ட ஸ்டாலின், ‘அப்படியா சொல்றீங்க? வேற சிலரும் இப்படித்தான் சொல்றாங்க’ என்று மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார்.

இப்படியாக கோட்டை உயரதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சீனியர் அமைச்சர்கள் எல்லாம் சொல்வதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் அப்படியே நம்புகிறார். ஆனால் இதை படிக்கும் மக்கள் நம்புகிறார்களா என்பதை அவர்களிடமே விட்டுவிடுவோம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

‘துணைவேந்தர் பதவிக்கு ரூ.50 கோடியா?’: விசாரணை நடத்த இ.கம்யூ வலியுறுத்தல்!

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்குத் தடை!

+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *