பஞ்சாப், குஜராத்… அடுத்து ஹரியானாவையும் விட்டு வைக்காத கெஜ்ரிவால்

அரசியல்

“ஆம் ஆத்மியால் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்றால் நீங்களே அக்கட்சியைத் தூக்கி எறிந்துவிடுங்கள்” என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதம்பூா் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்றவர் குல்தீப் பிஷ்னோய்.

ஹரியாணாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டபோது, மாநிலத் தலைவா் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று குல்தீப் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

மேலும், ஒருசில விஷயங்களில் அவர் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம், அவரது கட்சி பொறுப்புகளை காங்கிரஸ் பறித்து நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்ததுடன், பாஜகவிலும் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், குல்தீப் தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஆதம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், ஆதம்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 8) உரையாற்றிய கெஜ்ரிவால், “ஹரியானாவில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க இந்த ஆதம்பூர் இடைத்தேர்தல் ஒரு நுழைவு வாயில் போன்றது.

இந்த இடைத் தேர்தல், மாநிலத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் ஆகும்.

ஆம் ஆத்மி இந்த இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. ஒரு முறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள். அப்படி, எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்றால் நீங்களே எங்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள்” என்றார்.

டெல்லியில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலையும் குறிவைத்து வேலை செய்து வருகிறார் கெஜ்ரிவால். இதற்கிடையில் ஹரியானா மாநிலத்தையும் குறிவைத்து இப்போது களமிறங்கியிருக்கிறார்.

ஜெ.பிரகாஷ்

ஆப்ரேஷன் லோட்டஸ்: குடியரசுத் தலைவரை சந்திக்கும் ஆம் ஆத்மி

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *