அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 5) ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
அரியானா மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களாக தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அதன் தலைவர்களின் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அம்மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 2.03 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 300- க்கும் அதிக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
இதன்காரணமாக, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களும், 11 ஆயிரம் சிறப்பு காவல் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 101 பெண்கள், 930 ஆண்கள் அடங்குவர். பெரிய கட்சிகளை தவிர்த்து 464 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர்.
முதலமைச்சர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
அரியானா சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.
இதில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.
இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதன் முடிவுகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மாலை இரு மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’இந்தியன் 3’ நேரடி ஓடிடி ரிலீஸ் : உண்மையா? வதந்தியா?
டாப் 10 நியூஸ் : அரியானா சட்டமன்ற தேர்தல் முதல் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வரை!