இந்தியாவை பாரதம் என்று அழைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாநாட்டில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருந்தினர்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழ்களில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல் பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா என்ற பெயர் பாரதம் என்று மாற்றப்பட உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவை பாரதம் என்று அழைத்தால் மகிழ்ச்சி என தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “பாரத தேசம் என்று அழைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பாரத தேசம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நம் நாட்டின் பெருமை. முதலில் பாரத தேசம் என்று தான் நாம் அழைத்துக் கொண்டிருந்தோம்.
நமது பிரதமர் மோடி ஆங்கிலேயர்களின் தாக்கம் எங்கு எல்லாம் இருக்கிறதோ அதில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
’பாரத தேசம் என்று தோள்கொட்டுவோம்’ என்று தானே பாரதியார் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
புதிய தலைமை செயலகம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
மீனவ குடும்பங்களுக்கு ரூ.4.10 கோடி நிவாரணம்!