மாற்றுத்திறனாளி துறைமீது தனிக்கவனம் வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று (நவம்பர் 24) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் வகையில் கொள்கைகளை வகுக்க ஆலோசனை நடைபெற்றது.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்கவும், அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில் சுயமரியாதையுடன் வாழ்கின்ற நிலையை உறுதி செய்யவும் 2011ஆம் ஆண்டு, கலைஞரால் இத்துறை தனியாக உருவாக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கலைஞர் நினைத்தார். அத்தகைய கவனத்தோடு இத்துறையை நானும் எனது தனிக் கவனிப்பில் வைத்துள்ளேன்.
நமது அரசு பொறுப்பேற்ற பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து உயர்த்தப்பட்டு தற்போது ரூபாய் இரண்டாயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 2,11,391 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலக குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தொழில் தொடங்க, உதவி செய்ய குறைந்தபட்ச கல்வித் தகுதியை 8ஆம் வகுப்பு தேர்ச்சியாக குறைத்தும் வயது உச்சவரம்பை 45லிருந்து 55ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி, நகரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதவித் தொகை, உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் அனைவருக்கும் நிலுவையின்றி, சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு நமது அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு 5 விழுக்காடுகள் வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டுமனை பட்டா வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலைய பயிற்சி மையங்களில் பணியாற்றும் 1,294 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ. 14 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காக தள்ளுவண்டி கடைகள் நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. திருமண நிதியானது, இனி முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
அரசு வளாகங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகை, முன் தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் 1,763 கோடியே 19 லட்சம் ரூபாயில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த 6 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஆதியோகி டிபி: ஷாரிக் வைக்க இதுதான் காரணம் – சத்குரு
தேர்தல் ஆணையர் நியமனத்தில் அவசரம் ஏன்? – உச்சநீதிமன்றம்