Hamas prepared for a ‘long war’ with Israel

நீண்ட போருக்குத் தயார்: ஹமாஸ் அறிவிப்பு!

அரசியல்

‘எங்களிடம் ராக்கெட் களஞ்சியமே இருப்பதால் நீண்ட போருக்கும் நாங்கள் தயார்’ என்று பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அறிவித்துள்ளது.

மேலும்,  பாலஸ்தீனியர்களின் தலைமுறைகளுக்கும் இந்த அடி வலிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன் யாஹுவும் சூடாக பேசியிருக்கிறார். இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் போர் தொடங்கியது.

அக்டோபர் 7 சனி அதிகாலை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் எல்லை பாதுகாப்பு பொறிமுறைகளை மீறி, சுமார் ஏழாயிரம் ராக்கெட்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு.

மேலும் தரை வழியாகவும், கடல் வழியாகவும், பாராசூட் மூலம் வான் வழியாகவும் சென்று இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேல் ராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த இஸ்ரேல் காசா நகர் முழுவதையும் மூன்று நாட்களாக வான்வெளித் தாக்குதல் மூலம் தாக்கி முற்று முழுதாக அழித்துவிட்டது.

காசாவுக்கு இனி குடிநீர், உணவு, மின்சாரம் என அந்த அடிப்படை வசதியும் கிடைக்க முடியாமல் அந்த பகுதியையே துண்டித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்த நிலையில் நான்காவது நாளாக இன்று (அக்டோபர் 10) தாக்குதல் தொடர்கிறது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு அக்டோபர் 9 திங்களன்று காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் கடுமையான தாக்குதல் பற்றி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அப்போது, “நாம் ஹமாஸைத் தாக்கத் தொடங்கிவிட்டோம். வரவிருக்கும் நாட்களில் எதிரிகளுக்கு நாம் என்ன செய்வோம் என்பது தலைமுறை தலைமுறையாக அவர்கள் உணரும்படி இருக்கும்” என்று கோபமாக பேசினார் நெதன் யாஹு.

இதேநேரம் இஸ்ரேலுடன் நீண்ட போரை நடத்த ஹமாஸ் தயாராக இருப்பதாகவும், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம், பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் நாடுகடத்தப்பட்ட தலைமை உறுப்பினரான அலி பராகே பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க காஸாவில் உள்ள பணயக்கைதிகளை பயன்படுத்திக் கொள்ள ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.

ஹமாஸிடம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் ராக்கெட்டுகளின் ஆயுதக் களஞ்சியமே இருக்கிறது. இந்தப் போருக்கு நாங்கள் நன்கு தயாராகிவிட்டோம், நீண்ட காலப் போரின் சூழ்நிலையையும் கூட சமாளிப்போம்” என்று அவர் கூறியுள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான இந்த போர் இதற்கு முன்பு நடந்தது போல அங்கொன்றும் இங்கொன்றுமான தாக்குதலாக இல்லாமல், நீண்ட போராக தொடரும் அபாயம் இரு தரப்பாலும் வெளியிடப்பட்டுள்ளது.

வேந்தன்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

பெயர் பலகையை மட்டும் மாற்றிய அதிமுக அரசு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

மீண்டும் 43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *