அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் 2ஆவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் ரெய்டு நடத்தி வருகிறது.
கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைந்த 5 மாதங்களில் விஜயபாஸ்கர் வீட்டு கதவுகளைத் தட்டியது லஞ்ச ஒழிப்புத் துறை. அப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
2016ஆம் ஆண்டு தேர்தலின் போது 6 கோடியே 42 லட்சம் ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது கிடுகிடுவென உயர்ந்து 58 கோடி ரூபாயாக உள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறை எப்.ஐ.ஆரில் தெரிவித்திருந்தது.
2013 முதல் 2021 வரை சட்ட விரோதமாகச் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இதன் அடிப்படையில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோவை, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தியது.
இந்த ரெய்டின் முடிவில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 4 கிலோ 870 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.
தற்போது மீண்டும் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களை லஞ்ச ஒழிப்புத்துறை குறிவைத்துள்ளது.
இந்த முறை தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு செய்ததாக விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள மஞ்சக்கரணை கிராமத்தில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெறுவதற்கு ஒரு மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.
ஆனால், வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் கட்டுமானப் பணியே நிறைவு பெறாத ஒரு கட்டிடத்தில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இயங்கி வருவதாகப் போலி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சென்னை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட13 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்யத் தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்தது.
இவ்வாறு ஏற்கனவே நெருக்கடியில் உள்ள விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்களில் 2ஆவது முறையாகச் சோதனை நடைபெறுவது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் ராஃபிக்
கே.சி.ஆர். கலாய்… அண்ணாமலை பதில்!