குட்கா முறைகேடு புகாரில் சம்மந்தப்பட்ட கிடங்குக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிய மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) தள்ளுபடி செய்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.
அதில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கைதான 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி என யார் பேரும் இடம்பெறவில்லை. இந்தசூழலில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு 2022ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதனையடுத்து 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த 2022 நவம்பர் 23ஆம் தேதி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும், சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்தும் மீண்டும் தாக்கல் செய்ய விசாரணை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே குட்கா பொருள்கள் வைத்திருந்தாக தன்னுடைய குடோன் சீல் வைக்கபட்டுள்ளதாகவும், வாடகைக்கு விடப்பட்ட குடோன் சீல் வைக்கபட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளாதவும், இந்த வழக்கில் எந்த சம்மந்தம் இல்லாத நிலையில் என்னுடைய குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று அதன் உரிமையாளர் சுமந்த் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழையை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கு விசாரணையை மே 11ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பிரியா
வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் மீண்டும் ரஹானே