குட்கா வழக்கு : முன்னாள் அமைச்சர்கள், டிஜிபி ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் , பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி, டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இவர்களை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து சிபிஐ கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிசெல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகளான லக்ஷ்மி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர். மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது குற்றப்பத்திரிகை நகல் தயாராகவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கு மீண்டும் இன்று (செப்டம்பர் 23) விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் 250 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இவை பென் டிரைவில் சாஃப்ட் காப்பியாக தாக்கல் செய்யப்பட்டது.

இதை காகித வடிவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அப்போது கூடுதல் குற்றப்பத்திரிகையை பெற குற்றம்சாட்டப்பட்ட சி.விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் என அனைவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்!

ஒரு மக்கள் பிரதிநிதி இப்படியெல்லாம் பேசலாமா? : சிவி சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share