ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு!

அரசியல்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே (67). இவர் நரா நகரில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் அபேவை நோக்கிச் சுட்டதாக ஜப்பான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதில் படுகாயமடைந்த அபே ரத்த காயங்களுடன் கீழே சரிந்துள்ளார். துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அதிர்ச்சிக்குள்ளான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் அசைவின்றி காணப்பட்ட அபேயை ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அவர் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 48 வயது மதிக்கத்தக்க அவரிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்தும், ஷின்சோ அபேவின் உடல் நிலை குறித்தும் தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. அதே சமயத்தில் ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ கூறுகையில், “முன்னாள் பிரதமர் அபே உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணியளவில் நராவில் சுடப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அபேயின் நிலை குறித்து தற்போது வரை சரியான தகவல் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் சமீப காலமாகத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மற்றொரு வல்லரசு நாடான ஜப்பானில் அதுவும், முன்னாள் பிரதமர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *