குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது.
குஜராத்தில், 182 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, செளராஷ்டிரம், கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் அடங்கிய 89 தொகுதிகளில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60.23 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இரண்டாம் கட்ட தேர்தல்
இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக, அகமதாபாத், வதோதரா, காந்தி நகா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் இன்று (டிசம்பர் 5) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இரண்டாம் கட்ட தோ்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள், 285 சுயேச்சைகள் என மொத்தம் 833 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இதில், பாஜகவும் ஆம் ஆத்மியும் தலா 93 தொகுதிகளிலும் காங்கிரஸ் 90 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதுதவிர, பகுஜன் சமாஜ் 44 இடங்களிலும், பாரதிய பழங்குடியினா் கட்சி 12 இடங்களிலும் களத்தில் உள்ளன.
பாஜக சார்பில் முதல்வா் பூபேந்திர படேல், படிதாா் இனத் தலைவா் ஹர்த்திக் படேல், காங்கிரஸ் சாா்பில் ஜிக்னேஷ் மேவானி, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுக்ராம் ரத்வா (ஜெட்பூா்) உள்ளிட்டோா் இரண்டாம் கட்டத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
2.51 கோடி வேட்பாளர்கள்
இரண்டாம் கட்ட தோ்தலில், மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.51,58,730 கோடி. இதில் ஆண்கள் 1.29,26,501 கோடி போ், பெண்கள் 1.22,31,335 கோடி போ் ஆவா். 894 பேர் மூன்றாம் பாலினத்தவராவர். இவா்கள் வாக்களிப்பதற்காக 14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. சுமாா் 1.13 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் 13,319 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு வெப்காஸ்ட் செய்யப்படுகிறது.

வாக்களித்த மோடி, அமித் ஷா
பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி தொகுதியில் இன்று காலை 9.25 மணியளவில் தனது வாக்கினை பதிவை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சிறிது தூரம் மக்களுக்கு கையசைத்தபடி நடந்து சென்றார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து அவரது சகோதரர் சோமாபாய் மோடி, தாயார் ஹீராபென் ஆகியோரும் வாக்களித்தனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் நயன் மோங்கியா, ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி, படிதாா் இனத் தலைவா் ஹாா்திக் படேல் ஆகியோரும் தங்கள் வாக்கினைச் செலுத்தினர்.
குஜராத்தில் இரண்டம்கட்ட வாக்குப் பதிவில், காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், 11 மணி வரை 19.17 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. பின்னர் மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்