குஜராத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிசம்பர் 5) காலை 8 மணிக்கு துவங்கியது.
குஜராத்தில் உள்ள 182சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 60.23 சதவிகித வாக்குகள் பதிவானது.
இந்தநிலையில், குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தலானது 14மாவட்டங்களைச் சேர்ந்த 93சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத், காந்திநகர், மெஹ்சானா, பனாஸ்கந்தா உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவானது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் 60 கட்சிகளை சேந்த 833வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி 93தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 90இடங்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
26,409வாக்குச்சாவடி மையங்களில் 36,000மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட தேர்தலில் 2,51,58,730 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1,29,26,501 ஆண் வாக்காளர்களும், 1,22,31,335 பெண் வாக்காளர்களும் உள்ளனர்
அகமதாபாத் ரானிப் பகுதியில் உள்ள பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களிக்க உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாரன்புரா பகுதியில் உள்ள நகராட்சி துணை மண்டல அலுவலகத்தில் வாக்களிக்க உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 27ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ், பாஜக என இருமுனை போட்டி நிலவி வந்த குஜராத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சி இணைந்ததால், மும்முனை போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல், மிக முக்கியமான ஒன்றாக இந்திய அரசியலில் பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 8-ஆம் தேதி குஜராத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
செல்வம்
“மசோதாவிற்கு உடனே கையெழுத்துப் போட வேண்டியதில்லை” – தமிழிசை
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!