குஜராத் முதற்கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

அரசியல்

குஜராத்தில் நாளை (டிசம்பர் 1) 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதியும், 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது. இதில் நாளை நடைபெறவிருக்கும் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலின் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

பாஜகவின் கோட்டையான குஜராத்தில், இந்த முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி  சார்பில் தலா 89 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில்  88 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி, முன்னாள் அமைச்சர் பர்சோத்தம் சோலங்கி, 6 முறை எம்.எல்.ஏவான கன்வார்ஜி பாவாலியா, மோர்பி தொங்க பால விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றிய கண்டிலால் அமிர்தயா, கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, ஆம் ஆத்மியின் குஜராத் மாநிலத் தலைவர் கோபால் இட்டாலியா ஆகியோர் பிரபல வேட்பாளர்களாகும்.

gujarat election tomorrow vote boll

இந்த வேட்பாளர்களில் பாஜக சார்பில் 9 பெண் வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 6 பெண் வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 5 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். குறிப்பாக பாஜக சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, குஜராத்தின் ஜாம் நகர் தொகுதி வேட்பாளராய் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதுதவிர, பாரதிய  பழங்குடியினர் கட்சி 14 பேரையும், சமாஜ்வாடி 12 பேரையும், மார்க்சிஸ்ட் 4 பேரையும், இந்திய  கம்யூனிஸ்ட் 2 பேரையும் களமிறக்கியுள்ளது. இவர்கள் தவிர 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், வயநாடு எம்.பி. ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.

ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். நேற்று மாலை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அங்குள்ள பாவ் நகர் மாவட்டத்திலும், கட்ச் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பிரசாரம் மேற்கொண்டனர்.

gujarat election tomorrow vote boll

அதேபோல் அகமதாபாத்தில் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சிப் பேரணியில் பங்கேற்றார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் ஆகியோரும் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வெளியூர் ஆட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தேர்தலுக்காக 25,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் நகர்ப்புறங்களில் 9,018 வாக்குச்சாவடிகளும்,  கிராமப்புறங்களில் 16,416 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 38,749 விவிபேட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதற்கட்ட தேர்தலில் 27,978 தலைமை தேர்தல் அதிகாரிகளும், 78,985 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த முதற்கட்ட தேர்தலுக்கான மொத்த தொகுதிகளில், 2,39,76,670 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,24,33,362 பேரும், பெண்கள் 1,15,42,811 பேரும், திருநங்கைகள் 497 பேரும் உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 4,91,17,308 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

எதிரிகளின் வதந்திகளை அறுத்து எறிய வேண்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு திட்டவட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.