குஜராத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்று பிரசாரம் நிறைவு பெறுகிறது.
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், 89 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
இறுதி நிலவரப்படி, அங்கு, 63.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது.
இதையொட்டி பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா. ஜ. க பிரபலங்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாய் தீவிர பிரசாரம் செய்தனர். நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்ட மோடி, இதுவரை குஜராத் தேர்தலுக்காக அவர் மொத்தம் 31 பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார்.
இதில் நேற்று மட்டும் பிரதமர் மோடி அகமதாபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்துக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி பங்கேற்ற மிகப்பெரிய வாகன பிரசாரமாக இது அமைந்துள்ளது.
அதுபோல் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும், ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.
முதல்வர் பூபேந்திர படேல், மூத்த அமைச்சர் ஹிருஷிகேஷ் படேல், ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர், காங்கிரஸ் சார்பில் மாநில எதிர்க்கட்சித் தலைவர்களான சுக்ராம் ரதவா மற்றும் ஜிக்னேஷ் மவானி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பாரத் சிங் வகாலா, பீமா பாய் சவுத்ரி ஆகியோர் இரண்டாம் கட்ட தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரபல வேட்பாளர்களாகும்.
இங்கு, பா. ஜ. க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் 93 இடங்களிலும், காங்கிரஸ் 90 வேட்பாளர்களையும் மீதமுள்ள இடங்களை என்சிபிக்கும் விட்டுள்ளது. குஜராத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 69 பெண் வேட்பாளர்களும், 285 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ஜெ. பிரகாஷ்
எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!