முடிவுக்கு வரும் முதற்கட்ட பிரச்சாரம்: களைகட்டும் குஜராத் தேர்தல்!

அரசியல்

குஜராத் சட்டப் பேரவை முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், சட்டப் பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது.

அதன்படி மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப் பேரவையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று (நவம்பர் 29) மாலையுடன் இந்த 89 தொகுதிகளிலும் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது.

இந்த 89 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உட்பட 39 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 88 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மொத்தமாக 339 சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 788 பேர் களத்தில் உள்ளனர்.

gujarat assembly elections

ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி, அக்கட்சியின் மாநில தலைவர் கோபால் இடாலியா, குஜராத் முன்னாள் அமைச்சர் பர்சோதம் சோலங்கி, இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் இந்த முதற்கட்ட தேர்தலில் அடங்கியுள்ளது.

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவே வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கூறினாலும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி அங்கு மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

இதனால், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இன்று அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 4 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷா தாஹோத், கேடா, அஹமதாபாத் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

gujarat assembly elections

இவர்களோடு சேர்த்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி, மன்சுக் மாண்டவியா, எம்.பி. தேஜஸ்வி சூர்யா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பாஜக சார்பில் பரப்புரையில் களமிறக்கிவிடப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மாநில தலைவர் ஜெகதிஸ் தாகோர், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோரும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

ஒரே நாளில் இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் குவிந்துள்ளதால் அங்கு பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்களின் பிரச்சாரம் வாக்குகளாக மாறுமா என்பது டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வரும்.

அப்துல் ராஃபிக்

ஜல்லிக்கட்டு வழக்கு: மீண்டும் இன்று விசாரணை!

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.