குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சி அமைக்க 92 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், பாஜக மதியம் 1 மணி நிலவரப்படி 155 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை முறியடிக்கும் வகையில், பாஜக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 127 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதே அக்கட்சி பெற்ற பெரிய வெற்றி ஆகும்.
இதற்கு முன்பாக குஜராத்தில் காங்கிரஸ் கட்சி 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 145 தொகுதிகளில் வெற்றி பெற்றதே, குஜராத் மாநிலத்தில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச தொகுதிகளாகும். அதனை தற்போது முறியடிக்கும் வகையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
1995-ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அவர் 30 பேரணிகளில் கலந்து கொண்டார். மேலும், சாலை வழியாக நடைபயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி ”இது நான் உருவாக்கிய குஜராத்” என்று தனது தொண்டர்களை சொல்லச் சொன்னார்.
மேலும், “நான் டெல்லியில் இருந்தாலே குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று எனக்குத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், நான் இங்கு வந்துள்ளேன். ஏனென்றால் கடந்த கால சாதனைகளை முறியடிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
பாஜக 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், மோடி தான் கூறியதை நிகழ்த்தி காட்ட உள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தேர்தல் பேரணிகளில் மட்டுமே நடைபயணம் மேற்கொண்டார்.
அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே போன்ற முன்னணி தலைவர்கள் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அவர்களது தேர்தல் பரப்புரை வாக்குகளாக மாறவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
மேலும், ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வித்தியாசத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, தேசிய கட்சி அங்கீகாரம் பெற 4 மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும்.
அதன்படி ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே டெல்லி, குஜராத், கோவாவில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், குஜராத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று 6 சதவிகித ஓட்டுக்களை வாங்கினால் தேசிய கட்சியாக உருவெடுக்கும்.
அதனடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி, 5 இடங்களில் முன்னிலை வகித்து 12.92 சதவிகித வாக்குகளை வாங்கியுள்ளது
குஜராத்தில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளதால், காந்தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகத்தில் மேள தாளங்களுடன் நடனம் ஆடி வருகின்றனர்.
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பாஜக தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
செல்வம்
நகரும் மாண்டஸ்: சீற்றத்துடன் காணப்படும் கடல்!
120 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி ஏன்?