“குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைவதால் அங்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து, அவ்விரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இமாச்சல் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி மட்டும் இன்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 14) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,
”இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 17ம் தேதியும், மனுத்தாக்கல் நிறைவு நாள் அக்டோபர் 25” என்று தெரிவித்த அவர்,
மனுத்தாக்கல் பரிசீலனை அக்டோபர் 27ம் தேதியும் அதைத் திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 29” எனவும் தெரிவித்தார்.
ஆனால், குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவில்லை. இதுகுறித்து பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
அது மட்டுமின்றி வானிலை போன்ற பல காரணங்களும் உள்ளன. பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த விரும்புகிறோம்.
இமாச்சல பிரதேசத்தில் 70 நாட்களுக்கு பதிலாக 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ்
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ்கள்: அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!