குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், குழு அமைக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அம்மாநில பாஜக அரசு முடிவு செய்து இருக்கிறது.
இன்று (அக்டோபர் 29 ) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமைப்பதற்கான குழுவை ஏற்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக அரசின் திட்டமாக இருக்கிறது.
பொது சிவில் சட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான குழு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக விரைவில் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இமாச்சல பிரதேச அரசும் பொதுசிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 2019 லோக் சபா தேர்தல் அறிக்கையிலும் பாஜக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.
பாஜக அரசின் இந்த பொது சிவில் சட்டம் என்பது மத சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான செயல் என்றும், இது அரசியலமைப்புக்கும் சிறுபான்மையினர்களுக்கும் எதிரானது எனவும், நாட்டின் எதிர்காலத்துக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்தாக முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிரிக்கும் சூரியன்: நாசாவின் வைரல் புகைப்படம்!
கமெண்ட்ரி களத்தில் கனா வீராங்கனை!