தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்றும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதற்கிடையே தனது சமூகவலைதளங்கள் வாயிலாகவும், மத்திய பாஜக அரசை விமர்சித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி குறித்து இன்று (ஏப்ரல் 14) புள்ளிவிவரத்துடன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“GST: வரி அல்ல… வழிப்பறி!
“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.
பேச நா இரண்டுடையாய் போற்றி!
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள ஜிஎஸ்டி-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!
அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது.
வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.
ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’எங்கள் காதுகள் பாவமில்லையா?’ : பாஜகவை இறங்கியடித்த ஸ்டாலின்
பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரல் ஆகும் பதிவு…!
விளம்பரத்தில் பாரபட்சமா? : தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!