ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கான சேவைக் கட்டணத்துடன் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளதற்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்திருக்கிறார்.
முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்கள் உறுதியான பிறகு, ரத்து செய்யப்பட்டால், அதற்கான சேவைக் கட்டணத்துடன் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில், ”முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ஒரு பயணி ரத்து செய்யும்போது,
ரூபாய் 240 கட்டணம் வசூலித்தால், அதற்கு ரூபாய் 12 ஜி.எஸ்.டி சேர்த்து ரூபாய் 252 ஆக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று விமானப் பயணம் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றின் முன்பதிவை ரத்து செய்தாலும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதுடன், நாடு முழுவதும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
நேற்று இரவு அவர் வெளியிட்ட பதிவில், ” ‘எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் வரி, நீ என்ன மாமனா, மச்சானா’ என்று கட்டபொம்மன் வெள்ளையர்களை பார்த்தே கேட்டார்.
நாம் ஒன்றிய அரசைப் பார்த்துக் கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
பெரும் தொகை செலவுசெய்து பயணம் செய்யமுடியாத சாதாரண மக்கள், பல மாதங்களுக்கு முன் காத்திருந்து ரயிலில் டிக்கெட் பதிவு செய்வது,
விமானங்களில் பறக்கும் பிரதமர் மோடி மற்றும் மோடியின் சகாக்களுக்கு எப்படி புரியும்?
கடினமான சூழலில் பயணங்களைத் தவிர்க்கும் மக்களின் தலையில் பெரும்மூட்டையை தூக்கிவைக்கிறது ஒன்றிய அரசு.
அடுத்ததாக நடந்து செல்பவர்களும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மோடி முன்னிறுத்திய பகல் கனவுகள்: காங்கிரஸ் கடும் தாக்குதல்!