குரூப் 4 தேர்வை 2023ஆம் ஆண்டுக்குள் நடத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. இதில் வெறும் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வருடம் நவம்பர் மாதம் தான் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அரசு பணியிடங்களை அதிகரிக்கவும் குரூப் 4 தேர்வை அடுத்த ஆண்டே நடத்தவும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமாவளவன் இன்று(டிசம்பர் 20), “கொரோனா காலத்திற்குப் பிறகு பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வினை எழுத தயாரான சூழலில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஆண்டு திட்ட அறிக்கை அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆளுநர் உரையில் அரசு பணியில் 10,402 பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் துறை வாரியான காலி பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தெரிய வருகிறது.
ஏற்கனவே நிரப்பப்படாத பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களுக்கான அறிவிப்பும் இந்த ஆண்டு திட்டத்தில் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
அத்துடன் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெரும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் தேர்வர்களுக்கு அரசு வழங்கும் 50 ஆயிரம் ரூபாய் நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.
எனவே தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென்றும் குரூப்-1 குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டி தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கான நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் குரூப் 4 தேர்வை அடுத்த ஆண்டே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா