”விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் சிறிய அளவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்” என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் தேசிய அளவிலான ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் சிறிய அளவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
முதல்வர் தங்கக் கோப்பைக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும்.
பீச் ஒலிம்பிக், ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டரங்க மைதானங்களையும், நீச்சல் குளங்களையும் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஜெ.பிரகாஷ்
ஆளுநரை முதல்வர் சந்திக்க வேண்டும்: அன்புமணி
மின் இணைப்புடன் ஆதார் எண்: செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!