மத்தியபிரதேச மாநிலத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 8 வரை எட்டு கட்டங்களாக, பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக, ஆண்கள் பதவியேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் மற்றும் அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்கள் வெற்றி பெற்றால் அவர்களது அதிகாரத்தை ஆண்கள் வைத்துகொள்ளும் நடைமுறைகள் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வருகிறது. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இருபடி மேலே போய் பெண்கள் வெற்றி பெற ஆண்கள் பதவி ஏற்றுக்கொண்டது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாமோ, சாகர், பன்னா ஆகிய பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்ற பெண்கள் பதவி ஏற்காமல், பெண்களுடய கணவர், தந்தை, மைத்துனர் என குடும்ப உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்கள் பதவியேற்றுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாகர் பகுதியில் உள்ள ஜெய்சங்கர் கிராமத்தில் வெற்றி பெற்ற 10 பெண்களில் 3 பேர் மட்டுமே பதவியேற்க வந்திருந்தனர். மற்ற பெண்கள் வரவில்லை.அவர்களுக்கு பதிலாக அவர்களது குடும்ப உறுப்பினரான,ஆண்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆஷாராம் சாகு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற பெண்கள் பதவியேற்க தயங்கினார்கள். அவர்கள் பதிவேற்க வரவில்லை என்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முதன்மை செயலாளர் உமாகாந்த் உம்ரூ கூறும்போது, "பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக,அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்வது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சரியான வேட்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார். மக்களாட்சியின் மரணங்கள்: ராகுல் காந்தி கூறுவது என்ன?