கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், பிஹெச்டி, முதுகலை பட்டதாரிகள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும் மே 10ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 166 இடங்களில் போட்டியிடுவோரின் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த ஆலோசனையில் இடம் பெற்றார்.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப்பின் நேற்று (ஏப்ரல் 11) பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதன்படி 52 புதுமுகங்களுக்கு கர்நாடகா தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுதவிர பட்டதாரிகள், மருத்துவர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பட்டியலில் 189 பேர் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் 32 பேர் ஓபிசி பிரிவினர். 30 பேர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 16 பேர் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
31 பேர் பிஹெச்டி முடித்தவர்கள், 31 பேர் முதுகலை பட்டதாரிகள். இவர்களை தவிர 8 மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பெங்களூரு காவல் ஆணையரான பாஸ்கர் ராவ் சாம்ராஜ் பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி, 5 வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகவை பொறுத்தவரை 1989க்கு பிறகு ஆட்சியில் இருந்த எந்த கட்சியும் வெற்றி பெற்றதில்லை. 2023 தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் அதிரடியாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.
பிரியா
மெட்ரோ: வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய கட்டுப்பாடுகள்
கிச்சன் கீர்த்தனா: ஆரஞ்சு ஸ்குவாஷ்