”அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் மோடிக்கு பயம்”: ராகுல் காந்தி விளாசல்!
நாளை (மார்ச் 17 ) நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பார்கள் என்று நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில், இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 16 ) செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் “இன்று காலையில் நாடாளுமன்றம் சென்று மக்களவை சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன். நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எனவே எனது கருத்துக்களை அவையில் முன்வைக்க எனக்கு உரிமை உள்ளது.
நாளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பார்கள் என நம்புகிறேன். ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி, அதானி, எஸ்பிஐ அதிகாரி, அந்நாட்டின் ஒரு மாநில முதல்வர் இருக்கும் புகைப்படம் பொதுவெளியில் உள்ளது. பொதுவெளியில் உள்ள ஒரு படத்தை நாடாளுமன்றத்தில் காண்பித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
அதானி குறித்து நான் பேசியது ஆட்சேபத்துக்குறியது இல்லை. அதானிக்காக விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் பயம் இருக்கிறது” என்றார்.
மேலும், “அதனால்தான் இதுபோன்ற விஷயங்களை திசை திருப்புகின்றனர். மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதே என் முக்கியமான கேள்வி.
லண்டனில் நாட்டை பற்றி நான் தரக்குறைவாக எதுவும் பேசவில்லை. நான் பேசியது குறித்து முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதானிக்கு, பிரதமர் மோடி எந்த அளவிற்கு சாதகமாக செயல்படுகிறார் என்பதை பற்றியே பேசினேன். அதானி விவகாரத்தை திசைத்திருப்ப மத்திய அரசு முயல்கிறது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஓபிஎஸ் ஆதரவாளர் வழக்கு: ஈபிஎஸ் பதில்!
ஆப்பிள் ஏர்பாட்ஸ்: இந்தியாவில் புதிய தொழிற்சாலையை அமைக்கும் பாக்ஸ்கான்