மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று முழு அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்பாத் படித்துறை பகுதியில் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்தநிலையில், மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு நேற்று (டிசம்பர் 27) கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடமளிக்க மத்திய அரசு ஒப்புதல் தர மறுக்கிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில், மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு, காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவிடமிருந்து அரசுக்கு கோரிக்கை வந்தது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு கார்கே மற்றும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, நினைவிடம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்மோகன் சிங்கின் முதுகில் குத்திய மிடில் கிளாஸ் – ஆனந்த் சீனிவாசன் வேதனை பேட்டி!