கும்பகோணம் கல்லூரி முதல் கோட்டை வரை… யார் இந்த அமைச்சர் கோவி செழியன்?

அரசியல்

’கோவி செழியன் ஆகிய நான்…’ என்கிற பதவியேற்பு உறுதிமொழியோடு  தமிழ்நாட்டில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் முனைவர் கோவி. செழியன் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.  பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சருக்கு வழக்கமாக வழங்கும் துறைகளைத் தாண்டி உயர் கல்வித் துறை கோவி செழியனுக்கு வழங்கப்படுவது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பட்டியல் சமுதாய மக்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று திமுக மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில்… இன்னமும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால்… விசிக அதிகாரத்தில் பங்கு என்ற குரலை சற்று உயர்த்திய நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் கோவி.செழியனுக்கு கொடுக்கப்பட்ட இடம் திமுகவின் வலிமையான பதிலாக அமைந்திருக்கிறது.

யார் இவர்?

மக்களுக்கு இவர் புதிதாக இருக்கலாம். ஆனால், திமுகவினருக்கு தமிழ்நாடு முழுதும் நன்கு அறிமுகமானவர் கோவி செழியன். தலைமைக் கழக பேச்சாளராக இவர் கால் படாத கிராம, நகரங்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு அனைத்து இடங்களிலும் பேசியவர்.

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் இருந்து  9 கிலோமீட்டர் தூரத்தில் சோழபுரத்துக்கு அருகே இருக்கும்  ராஜாங்க நல்லூர் என்ற குக்கிராமத்தைச் சேந்தவர் செழியன். இவரது தந்தையார் கோவிந்தன் திமுகவைச் சேர்ந்தவர். அதனால் செழியனுக்கு எட்டாவது படிக்கும்போதே தினமும் முரசொலி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாடப் புத்தகம் போலவே முரசொலியில் கலைஞரின் கடிதங்களையும் தினந்தோறும் படித்து வளர்ந்தார் கோவி.செழியன்.

அதாவது செழியன், முரசொலியில் கலைஞரின் கடிதத்தை அவரது உச்சரிப்பைப் போலவே வாசிக்க அதை கிராமத்திலுள்ள பலரும் திரண்டு கேட்பார்கள்.  ’நான் திமுகவில் சேரவில்லை…திமுகவிலேயே பிறந்தவன்’ என்று ஒரு பேட்டியில் கூட சொல்லியிருக்கிறார்.

இப்படி பள்ளிப் படிக்கும்போதே கலைஞரின் கடிதங்களை வாசித்து வாசித்து பேச்சாற்றல் மிக்கவராக மாறினார்.

1980 களில் கும்பகோணம் ஆடவர் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே படிக்கும்போது மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, அந்த கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பட்டியலின சேர்மன் என்ற பெருமையைப் பெற்றார் கோவி. செழியன்.

இந்த கல்லூரியில் கோவி செழியனின் ஜூனியரும் அவரது நண்பருமான விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன்,  ‘கும்பகோணம் கல்லூரித் தேர்தல் என்பது அப்போது தமிழகம் முழுக்க பிரபலமானது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையாக கும்பகோணம்  கல்லூரித் தேர்தல் பரபரப்பாக பேசப்படும்.

குறிப்பாக பிராமணர்களின் ஆதிக்கம் அப்போது அதிகமாகவே இருக்கும் கல்லூரி கும்பகோணம் கல்லூரி.  அப்படிப்பட்ட கல்லூரியில் முதல் பட்டியல் இன மாணவர் தலைவராக வெற்றி பெற்றார் கோவி செழியன். அவருக்குப் பின் அதே கல்லூரியில் நானும் மாணவர் பேரவைத் தலைவர் ஆனேன்..’ என்று  நம்மிடம் நினைவுகூர்கிறார்.

எட்டாவது படிக்கும்போதே முரசொலி வாசிப்பு, கல்லூரித் தேர்தலில் வெற்றி என கருத்தியல், களத்தியல் என இரு முனையிலும் தேர்ந்த கோவி செழியன் அடுத்து சென்னையில்  சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் திமுகவிலும் செயல்பட்டு வந்தார், அப்போது மாணவரணிக்கு துரைமுருகன் பொறுப்பு வகித்து வந்தார்.

அப்போது கல்லூரி முடிந்ததும் நேராக ஹாஸ்டலுக்கு செல்லாமல், நேராக அறிவாலயம் செல்வார் கோவி செழியன். அங்கே கலைஞர் உள்ளே நுழைந்ததும், ‘தானைத் தலைவர் கலைஞர் வாழ்க… முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க…’ என்று உரக்கக் குரல் எழுப்புவார் கோவி செழியன்.  அவரது குரல் மற்ற பல குரல்களுக்கு மத்தியில் தனித்து ஓங்கி தெரியும்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

1993 இல் கோவையில் திமுகவின் மாநில மாநாடு நடந்தபோது அதில் கலந்துகொள்ள… திமுக தலைவர் கலைஞர் கோவை சென்று காலை ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போதும், அறிவாலயத்தில் ஒலித்த அதே குரல், ‘கலைஞர் வாழ்க… டாக்டர் கலைஞர் வாழ்க…தானைத் தலைவர் கலைஞர் வாழ்க…’ என்ற குரல் ஒலித்தது.

கலைஞருடன் வந்த அவரது மகள் செல்வி இந்த வாழ்த்து முழக்கங்களைக் கேட்டு கோவி. செழியன் அருகே வந்து, ‘யாரு தம்பி நீங்க…’ என்று ஆச்சரியப்பட்டு விசாரித்துவிட்டு கலைஞரிடம் சொன்னார்.

இப்படியாக  கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என்று தொடர்ந்து நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றவர். அவர் காட்டும் பவ்யமும் பணிவும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தொடர்ந்து படித்து பட்டங்கள் பெறுவதில் முனைப்பு காட்டியவர் கோவி. செழியன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் கலைஞரின் உரைகள் குறித்த முனைவர் பட்டமும் ஆய்வு செய்து பெற்றுள்ளார் கோவி செழியன்.

மாணவரணி, வர்த்தக அணி என பொறுப்புகளில் செயல்பட்டாலும் தலைமைக் கழக பேச்சாளர் என்பதே கோவி செழியனுக்கு தொண்டர்களிடத்தில் பெரும் தொடர்பையும் அன்பையும் பெற்றுத் தந்தது. ஆர்பாட்டங்கள் முதல் மாநாடுகள் வரை முழக்கங்கள் எழுதித் தருவதிலும் வல்லவர் கோவி செழியன். அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இவரது முழக்கங்கள் பரபரப்பைக்  கிளப்பும்.

இப்படிப்பட்ட கட்சிப் பணிகள்தான்,  2011 இல் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வாய்ப்பையும் அவருக்கு பெற்றுத் தந்தது.  2011, 2016, 2021  என மூன்று தேர்தல்களில் தொடர்ந்து  வெற்றி பெற வைத்தது.  தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் பொருளாதாரத்தில் பெரிய பின்புலம் இல்லாதவர் கோவி செழியன். சில ஆண்டுகள் முன்புவரை வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்.

கட்சிப்பணிக்காக தஞ்சாவூர் வரை வந்த அமைச்சர் நேரு, ‘வாங்க… உங்க வீட்டுக்கு போய்  பாத்துட்டு வந்துடலாம்’ என்று அழைத்திருக்கிறார். அப்போது கோவி செழியன் தயங்கியிருக்கிறார்.  நேரு தனது பாணியில் செழியனை வற்புறுத்தி அழைத்துச் சென்று பார்த்துவிட்டு அதிர்ந்து போகிறார். காரணம் ஒரு மிகச் சிறிய வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார் கோவி செழியன். அதற்குப் பின் நேருவின்  வற்புறுத்தலின் பேரில்தான் புதிய வீடு கட்டினார் கோவி செழியன்.

இப்படி, ‘நான் பிறவியிலேயே  திமுக காரன்’ என்று  பெருமையோடு சொல்லிக்கொள்ளும் கோவி செழியன் முதல் முறை அமைச்சராகிறார். டெல்டாவின் அமைச்சரவை பிரதிநிதித்துவம் உயர்கிறது.

வேந்தன்

செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரனுக்கு இலாகா ஒதுக்கீடு!

செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் அமைச்சர்களாக பதவியேற்பு!

“மதவாத, பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து களமாடுவேன்”… மனோ தங்கராஜ்

+1
1
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

2 thoughts on “கும்பகோணம் கல்லூரி முதல் கோட்டை வரை… யார் இந்த அமைச்சர் கோவி செழியன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *