சுதந்திர தினத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 15) ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.
அதன்படி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார்.
ஆனால், இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். எனினும் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதன்படி மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.
அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின், தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ஜி.கே.வாசன் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா