சித்திரை கோபம், ஆடியில் தீர்ந்ததா? ஆளுநர் விருந்தில் முதல்வர்!

அரசியல்

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு காந்தி சிலையைப் பரிசளித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முப்படை அதிகாரிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இந்த நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தற்போது நடைபெற்றது.

இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மூவரும் ஒன்றாக ஆளுநர் மாளிகையில் விழா நடைபெறும் இடத்துக்கு பொடிநடையாக வந்தனர்.

மூவரும் நேராக மேடைக்குச் செல்லாமல் பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு வரிசையாகச் சென்று அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சார்ந்த தலைவர்களும், தமிழக அமைச்சர்களின் சார்பில் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மத்திய, மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

அதேநேரத்தில், இந்த விழாவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.

இந்த விழாவில் வழக்கத்துக்கு மாறாக, பாஜக என தனி வரிசை ஒதுக்கியது சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

பாஜக சார்பில் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற 12 மாணவர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

காந்தி சிலை பரிசளிப்பு!

இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காந்தி சிலையைப் பரிசளித்தார்.

கடந்த ஏப்ரல் 14, 2022 அன்று, சித்திரை தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இப்போது ஆடி மாதத்தில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் வைத்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டது அரசியல் அரங்கில் உற்று பார்க்கப்படுகிறது.

இருவருக்கும் இடையே சித்திரையில் நிலவிய வெப்பம், ஆடியில் தீர்ந்துவிட்டதா என்று அரசியல் அரங்கில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அங்கம் வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது தொடர்பான விவாதங்களும் அதிகமாகி வருகின்றன.

ஜெ.பிரகாஷ்

5 கோடி தேசியக் கொடி செல்ஃபிகள்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *