தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பிறகு மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் ஆர். என். ரவி ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தகுதியானவர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி 19 பக்க புகார் கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து வரும் நிலையில், முதல்வரின் இந்த புகார் கடிதம் தேசிய அளவில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி மு க வை பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் தொடங்கி தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் வரை ஆளுநர் பதவி என்பது தேவையில்லாதது என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
தமிழக ஆளுநரை நீக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு நேற்று கடிதம் எழுதிய நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக 1973-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி இந்தியாவில் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் எழுதியுள்ளார். இந்த கடிதமானது இன்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், ”ஆளுநர் பதவியை அகற்றுவதற்கான காலம் கனிந்துவிட்டது. மத்திய மாநில உறவுகள் குறித்த நிர்வாக சீர்திருத்த குழுவின் அறிக்கையில் ஆளுநர் அலுவலகம் பிரிட்டிஷ் காலனித்துவ முறையின் மரபு என்றும்,
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆளுநர் நியமன முறை என்பது காலத்திற்கு பொருந்தாத ஜனநாயக அமைப்பு என்றும் கூறியுள்ளது.
ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு செயலாளராகவும் அதற்கு பொறுப்பானவராகவும் இருப்பதால் உள்ளூர் நிலவரங்களையும் அரசியல் சூழலையும் அவர் புரிந்துகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆளுநரின் அலுவலகத்திற்கு செய்யப்படும் செலவுகள் சமூகத்தின் சோசலிச அமைப்புடன் ஒத்துப்போவதாக தெரியவில்லை.
இது வீண் செலவு என்பதால் அதை குறைக்கலாம். ஆளுநர் பதவிக்கு மாற்று ஏற்பாட்டாக மேற்கு ஜெர்மனியின் நடைமுறையை பின்பற்றலாம்.
அதன்படி ஆளுநர் நிறைவேற்றும் பணிகளை முதல்வர் நிறைவேற்றலாம். மரணம், ராஜினாமா போன்றவற்றால் முதல்வர் அலுவலகம் காலியானால் புதிய முதல்வர் பதவியேற்கும் வரை மாநில தலைமை நீதிபதி நிர்வாக பொறுப்பில் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
கடலில் பேனா அமைக்க எதிர்ப்பு: மனு தள்ளுபடி!
விரைவில் டாஸ்மாக் கடைகளில் ’கட்டிங்’ பாட்டில்: அமைச்சர் முத்துசாமி