கன்னித்தன்மை பரிசோதனை: “ஆளுநரின் ஆதாரமற்ற புகார்”- மா.சுப்பிரமணியன்

Published On:

| By Monisha

Governor's baseless complaint

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆதாரமற்ற புகாரை கூறுகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் அமைதி பூங்காவா இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினார். அதில் ஒன்று சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக கூறி சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஆளுநர் குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறைக்கு இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று (மே 6) பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் மருத்துவ முகாமை திறந்து வைத்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் ”நேற்று முன்தினம் (மே 4) தமிழ்நாடு ஆளுநர் பல்வேறு துறைகள் குறித்து தன்னுடைய பூதக்கண்ணாடி மூலம் தேடி அலசி, அரசின் மீது குறை கூற வேண்டும் என்று புகார்களை சொல்லியிருந்தார். அந்த புகார்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி இல்லை என்ற ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆளுநர் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பான விவகாரத்தில் கன்னித்தன்மை பரிசோதனை நடந்ததாக கூறியுள்ளார். நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது ஆளுநர் வகிக்கும் பொறுப்பிற்கு ஏற்றது அல்ல. அவருடைய கூற்றுத் தவறானது என்று துறை சார்பில் உறுதிப்படுத்துகிறோம்.

அவர் கூறிய குற்றச்சாட்டை ஏற்றுத் தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி, இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து மருத்துவ அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அந்த சமயத்தில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட படிவமும் ஆய்வு செய்யப்பட்டது.

அந்த படிவத்தில், சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அரசின் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக இது போன்ற புகாரை ஆளுநர் அளித்திருக்கிறார்” என்று பேசினார்.

மோனிஷா

“காவலர் பள்ளியை மூட நினைப்பதா?”: எடப்பாடி கண்டனம்!

“திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி”: ஆளுநருக்கு முதல்வர் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share