Governor’s allegation is completely untrue
தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ஆளுநர் கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த17,18 ஆகிய இரு நாட்களில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. அங்குள்ள அனைத்து அணைகளில் இருந்தும் மொத்தமாக சுமார் 1 லட்சம் கன அடி நீர் வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணியில் தமிழ்நாடு அரசுடன் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளுநர் குற்றச்சாட்டு!
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (டிசம்பர் 19) காலை தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு பணிகள் குறித்து ராஜ்பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், “மழை வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசுத் துறைகள் அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், மாநில அரசிடம் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால், எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பதில் மாநில அரசு தெளிவற்று இருப்பதாக கூறியுள்ளன” என பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் ரவி முன்வைத்தார்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மத்திய அரசின் அமைப்புகளுடனும் சிறப்பான ஒத்துழைப்பு!
அப்போது அவர், “தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்ள இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து அமைப்புகளுடனும் மாநில அரசு தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
Operating in inclement weather, IAF helicopters, Mi-17 V5 and ALH have flown more than 20 hrs, air dropped over 10 tons of relief material and evacuated stranded personnel, including woman and child from rooftop / isolated areas. pic.twitter.com/DEz3poVrzh
— SAC_IAF (@IafSac) December 19, 2023
அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே மத்திய அரசின் அனைத்து அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்பில் இருந்து வருகிறார்கள். மீனவர்களுக்கு தொடர்ந்து முன்னெச்செரிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மக்களை நேரடியாக சென்று மீட்க முடியாத இடங்களில் உணவு பொட்டங்களை வழங்கவும், அவர்களை அங்கிருந்து மீட்கவும் ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மழை கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகும் போது 1.14 கோடி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
வெள்ளப்பாதிப்பின் போது மத்திய அரசின் இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 750 பேர் திருவனந்தபுரம், உதகையில் இருந்து வந்து அர்ப்பணிப்புடன் மீட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று மத்திய அரசின் அனைத்து துறைகளுடன் மாநில அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்து இந்த நொடி வரை பணியாற்றி வருகிறோம்.
முற்றிலும் உண்மைக்கு புறம்பானது!
இந்த நிலையில் ஆளுநர் ரவி சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தி, அதன் முடிவில் மீட்பு பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் ஏன் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று தெரியவில்லை.
பொருட்படுத்த வேண்டாம்!
அரசியல் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டுகிறார். அனைத்து அமைச்சர்களும் 4 மாவட்டங்களிலும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் அண்ணாமலை கூறியுள்ள பொய் குற்றச்சாட்டை பொருட்படுத்த தேவையில்லை.
நாளை முதல்வர் ஆய்வு!
முதல்வர் டெல்லிக்கு சென்று இருந்தாலும் கூட, அவரது அறிவுறுத்தலின் பேரில் அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக இங்கு பணியாற்றி வருகின்றனர். மேலும் நாளை பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து மத்திய அரசு இன்னும் பதில் தரவில்லை. இதனை வழங்கும்படி குறை சொல்லக்கூடிய எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?
டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவி இழந்த பொன்முடி… ஜெயலலிதா, ராகுல் வழக்குகள் சொல்வது என்ன?
Governor’s allegation is completely untrue