டிஜிட்டல் திண்ணை: ஆளுநரின் ‘124’ திட்டம்… முளையிலேயே முறியடித்த ஸ்டாலின்

Published On:

| By Aara

Governor's '124' plan Stalin blocked with evidence

வைஃபை ஆன் செய்ததும் ஆளுநர் மாளிகை வாசலில் விழுந்து வெடித்த பெட்ரோல் குண்டு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நடத்திய பிரஸ்மீட் காட்சிகள் இன்பாக்சில் வந்தன.

அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

” 25ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகை கேட் நம்பர் 1 க்கு வெளியே பேரி கார்டு தடுப்புகளுக்கு முன்னால், பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், இந்த நிலையில் அன்று இரவு ஆளுநர் மாளிகையின் டெபுடி செகரெட்டரி செங்கோட்டையன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும், டிஜிபிக்கும் மூன்று பக்க புகாரை அனுப்பினார்,

அதில், ‘தமிழ்நாட்டில் ஆளுநர் ரவிக்கு எதிராக கருத்து ரீதியாகவும் செயல் ரீதியாகவும் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திமுகவும் அதன் தோழமை கட்சி தலைவர்களும் ஆளுநரை தாக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆளுநர் தர்மபுரம் ஆதீனம் விழாவிற்கு சென்றபோது ஆளுநர் மீது கற்களாலும் கம்புகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விஷயத்தில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தான் இன்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சாசன பதவி வகிக்கும் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். எனவே குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி வரையறுக்கும் ஐபிசி 124 பிரிவின் படி வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில்தான் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட நிபுணர்களோடும் காவல்துறை அதிகாரிகளோடும் உளவுத்துறை அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆளுநர் வலியுறுத்தும் 124 என்பது நம் விரலை எடுத்து நம் கண்ணையே குத்தும் முயற்சி என்று அதிகாரிகள் விளக்கினார்கள். ஆளுநருக்கு உரிய முறையில் பதில் தரும்படி உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன் பிறகு கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியபோது நடந்த சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டன. அதேபோல ஆளுநர் தனது நீண்ட புகாரில் குறிப்பிட்டிருக்கும் தருமபுரம் ஆதீனம் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோவும் ஆவண சேகரிப்பில் இருந்து தருவிக்கப்பட்டது.

இவற்றை வைத்துக்கொண்டு இன்று அக்டோபர் 27ஆம் தேதி தமிழ்நாட்டின் மூன்று முக்கிய போலீஸ் அதிகாரிகளான டிஜிபி , சட்டம் ஒழுங்கு ஏ டி ஜி பி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.

அதாவது ஆளுநர் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை வரையறுக்கிறார். ஆனால் பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் தான் விழுந்து வெடித்தது என்று சிசிடிவி ஆதாரங்களோடு டிஜிபி-யும் கமிஷனரும் தெரிவித்தார்கள். அதேபோல தர்மபுரம் ஆதீனம் தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டு பற்றி வீடியோ வெளியிட்டு விளக்கிய ஏடிஜிபி அருண், ஆளுநரின் கான்வாய் முடிந்து அதற்குப் பிறகு வந்த தனியார் வண்டியில் தான் ஒரு கருப்பு கொடி சென்று விழுந்தது. எனவே இது ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்று விளக்கினார்.

ஆளுநர் ரவி 124 பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அது தமிழ்நாடு அரசுக்கு பெரும் தலைகுனிவாக அதாவது குடியரசுத் தலைவர் ஆளுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வழக்கு என்பதால் தமிழ்நாடு அரசுக்கு தலைகுனிவாக இருக்கும், எனவே பதிய வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்ய முடியும் அப்படி ஒரு பின்னணி இந்த சம்பவத்துக்கு இல்லை என்று மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 124 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்ய என்.ஐ.ஏ.விடம் ஆளுநர் கேட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கடுமையாக மோதி கடைசியில் மத்திய அரசின் லீகல் ஒபீனியன் வாங்கி வருகிறேன் என்று இரண்டு மணி நேரத்துக்குள் பின் வாங்கினார் ஆளுநர். அதேபோல இப்போதும் ஆகிவிடக் கூடாது என்பதால் தான் சட்ட ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் ஆளுநர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ட்ராபிக்கில் போலீசை தாக்கி தப்ப முயன்ற ரவுடி : நடந்தது என்ன?

விபத்தில் கணவனை இழந்த தாய்: வீடு கட்டிக்கொடுத்த போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share