ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர். என்.ரவி நேற்று (ஆகஸ்ட் 15) அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
எனினும் அரசு சார்பில் நாங்கள் பங்கேற்போம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.அதன்படி நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், டிஜிபி சங்கர் ஜுவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று ஆளுநரும் அவரது மனைவியும் வரவேற்றனர்.
பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை ஆளுநர் அருகில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
இதைத்தொடர்ந்து வந்திருந்த விருந்தினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இவ்விருந்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் எ.வ. வேலுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
பாஜகவை சேர்ந்த எச் ராஜா, ஆளுநருடன் அமர்ந்திருந்த முதல்வரிடம் வந்து கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கைக்குலுக்கி பேசினார்.
கலை நிகழ்ச்சியின் போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அருகில் அமர்ந்திருந்த பிரேமலதா, விருந்து உண்ணும் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் வேலுவிடம் பேசியது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒருவர் வணக்கம் சொல்லும் போது நாமும் வணக்கம் சொல்வதில் என்ன இருக்கிறது. எங்கு சண்டை போட வேண்டுமோ அங்கு சண்டை போட வேண்டும்.
கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கக் கூடாது. இந்த வருடம் அவர் கலந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியலாகும். எங்கு நாகரீகமான அரசியலை செய்ய வேண்டுமோ அங்கு அதை செய்ய வேண்டும்” என பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!
சுதந்திரத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி… என்ன காரணம்?