தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அவரது மூன்று ஆண்டு கால பணிகள் குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 20 ) நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “ரீ-டிஸ்கவரிங் செல்ஃப் இன் செல்ஃப்லெஸ் சர்வீஸ் ” என்ற புத்தகத்தை வெளியிட்டார் தமிழிசை சவுந்தரராஜன்.
அப்போது பேசிய அவர், “எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர், அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன்.
நான் ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் ஆட்சிக்கு எந்தவிதமான இடையூறும் செய்வதில்லை. ஆனால் என் பணி, ஆட்சிக்கு இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரம் நினைக்கின்றனர்.
குடியரசு தினத்தில் என்னை கொடியேற்றவிடவில்லை.
தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகம் மீது முழுமையான அன்புடன் இருக்கிறேன்.
நான் மருத்துவராக இருந்தபோது என்னை மக்கள் பார்த்ததற்கும், தமிழக பாஜக தலைவரான பிறகு பார்த்ததற்கும் இடையே வித்தியாசம் இருந்தது.
நான் மருத்துவராக இருந்த போது, பார்ப்பவர்கள் அஞ்சும் வகையில் நான் இருப்பேன். 16 வயதினிலே படத்தில் ரஜினியை அழைத்தது போல பரட்டை என்று என்னை சிறுவயதில் அழைத்துள்ளனர். ஆனால் பரட்டைத் தலைமுடி எனக்கு பலமாகிவிட்டது.
மழை வெள்ளம் பாதித்த பகுதிக்கு தெலங்கானா முதல்வரை வர வைத்த பெருமை எனக்கு இருக்கிறது.
நான் செல்லப்போகிறேன் என்று தெரிந்த பிறகு தான் அந்த பகுதிக்கு முதலமைச்சர் சென்றார். தமிழகத்தில் என்னை பற்றி ட்ரோல் செய்தனர்.
அரசியலில் நாகரிகம் இருக்க வேண்டும். எவ்வளவு உளி தாக்கினாலும் நான் சிலையாகத்தான் மாறுவேன். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள்தான் அதிகம்.
ஆளுநரான எனக்கு அதிகாரம் இருந்தாலும், தனி விமானத்தை ஒருபோதும் எனது பயணங்களுக்கு நான் பயன்படுத்தியதில்லை.
சாப்பாட்டுக்கு ஆகும் பணத்தை கூட நான் தெலங்கானாவில் செலுத்தி விடுகிறேன்.
90 வயதில் பாதயாத்திரை செல்வேன் என்று என் தந்தை சொல்லிக்கொண்டிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல, தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், தமிழ்நாட்டில் காலும் வைப்பேன்.
ஆளுநர் கருத்து சொல்வதை சட்டம் தடுக்காது, நான் தமிழகத்தில் தவறு நடந்தால் அதை கண்டித்து கருத்து சொல்வேன்.
எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் மக்களோடு மக்களாகத் தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன்.
மத வேறுபாடு அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது. நான் பிரபலமான, பெரிய மருத்துவராக இருந்தேன். எனது வருமானத்தை விட்டு இன்று பதவியில் இருப்பது மக்களுக்காகத் தான்.
எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக, மக்களுடன் இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு வேண்டும்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ஆறுமுகசாமி அறிக்கை புரொபஷனல் கிடையாது” : அன்புமணி குற்றச்சாட்டு!
வெங்கட் பிரபுவை கலாய்த்த சிவகார்த்திகேயன்