ஆளுநர் தமிழிசை மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு திரும்புகிறாரா என்ற விவாதங்கள் தமிழக பாஜக வட்டாரங்களில் நடந்து வருகின்றன.
தற்போது தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று (அக்டோபர் 20) தனது நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு தமிழகத்தில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா ஆளுநராக தமிழிசையின் மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்கு ஆண்டுகள் தொடங்கியதை முன்னிட்டு, ‘தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய தமிழிசை, “தெலங்கானாவில் விரட்டிவிட்டார்களா? புதுச்சேரியில் விரட்டிவிட்டார்களா என்று கேட்கின்றனர். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள்தான் அதிகம்.
தமிழகத்துக்கு வந்தால் அங்கெல்லாம் உங்களை விரட்டுகிறார்கள். தமிழகத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன். காலையும் பதிப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது.
என்னை அங்கே கொண்டு போய் உட்கார வைக்க வேண்டாம். உங்களோடு உங்களாக இருக்க விடுங்கள் என்பதுதான் எனது கோரிக்கையாக இருக்கிறது. குடியரசுத் தலைவர் வாய்ப்பு வந்தபோது கூட நான் தெளிவாக கூறிவிட்டேன், மக்களோடு மக்களாக இருந்து கவர்னர் பதவியை ஆற்றி வருகிறேன்” என்று பேசியிருக்கிறார் தமிழிசை.
இந்த உரையின் மூலம் மீண்டும் பாஜகவில் இணைந்து தனது கட்சி அரசியல் பணிகளை செய்யவே தமிழிசை தயாராக இருப்பது கிரிஸ்டல் க்ளியராக தெரிகிறது. இதுபற்றி தமிழிசைக்கு நெருக்கமான தமிழக பாஜகவினர் சிலரிடம் பேசினோம்.
“தமிழகத்தில் பாஜக இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் தமிழிசை என்றால் அதை மறுக்க முடியாது. பல்வேறு கிராமங்களில் கொடியேற்றி பல்வேறு தரப்பினரிடமும் கட்சியைக் கொண்டு சென்றவர்.
மேடையும், போடியமும் அதிர அதிர தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று முழங்கியவர். ஆனால் திடீரென ஒரு நாள் அவர் ஆளுநராக தெலங்கானாவுக்கு அனுப்பப்பட்டார்.
ஆளுநர் என்ற உயர்ந்த பதவிக்குச் சென்றாலும் தமிழிசைக்கு கட்சிப் பணியிலும் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும்தான் விருப்பமான விஷயங்களாக இன்னமும் இருக்கின்றன.

ஆளுநராக இருந்தபோதும் வாராவாரமோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ சென்னை வந்துவிடும் தமிழிசை தனக்கு நெருக்கமான பாஜக நிர்வாகிகளையும், பத்திரிகையாளர்களையும் வீட்டுக்கு வரவழைத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்போது தமிழக பாஜகவின் உள் விவகாரங்கள், மற்ற அரசியல் நிலை குறித்தெல்லாம் பேசுகிறார். ஆளுநராக இருந்தபோதும் கூட அதை ஒரு தடையாகக் கருதாமல் எந்த பொதுப் பிரச்சினையிலும் தைரியமாக குரல் கொடுத்தும், கருத்துகளை வெளியிட்டும் வருகிறார்.
இந்த நிலையில்தான் மீண்டும் பாஜகவில் தமிழக அளவிலோ அல்லது தேசிய அளவிலோ பொறுப்பை வாங்கிக் கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட தீவிர முயற்சி எடுத்து வருகிறார் தமிழிசை.
வரும் எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழகத்தில் நின்று நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இப்போதைய தமிழிசையின் இலக்கு” என்கிறார்கள்.
இது சாத்தியமா என்று நாம் கேட்டபோது, “பாஜகவில் இதற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவின் மேயராக இருந்த பாஜக பெண் பிரமுகர் பேபிராணி மௌரியா உத்தரகாண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் தமிழிசையை போல அவருக்கும் ஆளுநராகும் ஆசை இருந்தது. இதுகுறித்து பாஜக முக்கிய தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் பேபிராணி.
அவர் 1996 ஆம் ஆண்டு ஆக்ரா மாநகராட்சி மேயராக பாஜகவில் பதவி வகித்தவர். அதன் பிறகு உபி சட்டமன்றத் தேர்தலில் எட்மட்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பிஎஸ்பி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில்தான் 2018 ஆகஸ்டு மாதம் உத்தராகண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து தனது பாஜக உறுப்பினர்பதவியை ராஜினாமா செய்தார். 2021 வரை ஆளுநராக இருந்த பேபிராணி மௌரியா அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என பலரும் சொல்லி வந்த நிலையில்,
2022 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆக்ரா புறநகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் பேபிராணி மௌரியா. 76,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிஎஸ்பி வேட்பாளரான கிரண் பிரபா கேசரியை தோற்கடித்தார்.
எனவே ஆளுநராக இருந்தவர் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கலாம் என்பதற்கு பாஜகவில் லேட்டஸ்ட் உதாரணம் பேபிராணி மௌரியா. உத்தரப் பிரதேச பாஜகவில் தலித் முகமாக திகழும் பேபிராணிக்கு தற்போதைய ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழக பாஜகவில் தற்போது நாடார் சமூகத்தில் நட்சத்திர தலைவர்கள் யாரும் இல்லை. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தற்போது எழுபது வயதாகிறது. வரும் எம்பி தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறிதான்.
இந்த நிலையில் தமிழிசையை மீண்டும் தமிழ்நாட்டின் ஆக்டிவ் அரசியலில் களமிறக்கலாமா என்பது குறித்து தேசிய தலைமை பரிசீலித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தனக்கு கிடைத்த சில நம்பகமான தகவல்களின் அடிப்படையில்தான் தனது புத்தக வெளியீட்டு விழாவில் தமிழகத்தில் மூக்கையும் நுழைப்பேன் காலையும் பதிப்பேன் என்று அதிரடியாக பேசியிருக்கிறார் தமிழிசை” என்கிறார்கள்.
-ஆரா
விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தனியார் விடுதியில் கொடூரம்!
மதுரை மருத்துவக் கல்லூரி கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!