ஆளுநர் உரை பழங்கதை, புதிது எதுவும் இல்லை: ஓபிஎஸ்
சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த உரை திமுக அரசின் ஆளும் திறமையின்மையைக் காட்டுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் சட்டப்பேரவையில் வாசித்த உரையால் பல சர்ச்சைகள் எழுந்தன. பலரும் ஆளுநரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த உரை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆளுநர் உரை என்றால், வருங்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்க வேண்டும். அந்தக் கனவை நனவாக்கும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.
ஆனால், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திமுக ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆளுநர் உரையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலமைச்சர் அயராத உழைப்போடும், அக்கறையோடும் அரசை வழிநடத்தி உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை நிலை என்னவென்றால், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு எனத் தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி தி.மு.க. அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 1,000 ரூபாய் வழங்க இருப்பதை ஆளுநர் உரையில் பெரிய சாதனை போல் குறிப்பிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
ஆளுநர் உரையில், பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், வெறும் மூன்று ரூபாய் உயர்வு என்பது ஏமாற்றமளிக்கும் செயல்.
இது தவிர, ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் வகைகள், இனிப்பு வகைகள் என அனைத்து ஆவின் பொருட்களின் விலையைப் பன்மடங்கு உயர்த்தி, தமிழ்நாட்டு மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ள அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது.
கோவிட் தொற்று குறித்துக் குறிப்பிடுகையில், மாநிலத்தில் போதிய மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்து, எதிர் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவக் கட்டமைப்பு என்பது போதிய உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
கொரோனா தொற்றின்போது நியமனம் செய்யப்பட்ட 2,500 செவிலியர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்ட நிலையில், முந்தைய தி.மு.க. அரசின்போது பிறப்பிக்கப்பட்ட பதவி மற்றும் ஊதிய உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட் தேர்வு ரத்து” என்ற வாக்குறுதி மேடைக்கு மேடை பேசப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதும், இதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டு இருப்பதும் வருத்தமளிக்கும் செயல் ஆகும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் வகையில் எந்த மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடாததிலிருந்து, இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மனதிலேயே இருப்பதைத் தான் காட்டுகிறது.
“இல்லம் தேடிக் கல்வித் திட்டம்” குறித்து பெருமையாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி தேடிச் சென்றாலே கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத அளவிற்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற நிலையில், “இல்லம் தேடிக் கல்வி” என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ஆரம்பிக்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தைப் பற்றியும், ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது பற்றியும், நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம் பற்றியும் இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில் பழங்கதை பேசப்பட்டு இருக்கிறதே தவிர, புதிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்த ஆளுநர் உரையில் ஒரு திட்டமும் இல்லை.
இந்த ஆளுநர் உரையில், 2 இலட்சத்து 23 ஆயிரத்து 210 கோடி ரூபாய் முதலீடும், 3 இலட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், காலியாகவுள்ள கிட்டத்தட்ட 5 இலட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது இளைஞர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாப் பயணம் குறித்து இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உண்மைநிலை என்னவென்றால், முன் பக்கமும், பின் பக்கமும் இளஞ் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட கட்டணமில்லாப் பேருந்துகளுக்காகப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மகளிர் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரின் பேச்சிற்குப் பிறகு கட்டணமில்லாப் பயணத்தையே மகளிர் வெறுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தோ, 70 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்குக் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்தோ அகவிலைப்படி உயர்வைக் காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்குவது குறித்தோ ஆளுநர் உரையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
மாறாக, அகவிலைப்படி உயர்வினை ஆறு மாத காலம் தாழ்த்தி கொடுத்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை ஆளுநரே படிக்காமல் விட்டுவிட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் வெடிகுண்டு கலாச்சாரம், போதைக் கும்பலின் ஊடுருவல், அன்றாடம் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள் ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழவில்லை என்ற முடிவுக்கு ஆளுநர் வந்துவிட்டார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
”மாய சக்தி காதலை மறக்க வைக்கும்”: சமந்தாவின் சாகுந்தலம் டிரெய்லர்!
முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்