டிஜிட்டல் திண்ணை: சட்டமன்றத்தில் ஆளுநர் உரை… ஸ்டாலின் -ஆர்.என்.ரவி. தனித்தனியே ஆலோசனை! மீண்டும் சம்பவம்?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூட்டத் தொடர் தொடங்கும் முன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்யும் புகைப்படம் இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூடுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரும் பட்ஜெட் கூட்டத் தொடரும் இணைந்து நடக்கிறது.

வழக்கமாக ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் சட்டமன்றம் ஆளுநர் உரையோடு கூடும். ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் சட்டமன்றம் கூடவில்லை. எனவே புதிய ஆண்டின் முதல் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டும் இணைந்து பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையோடுதான் சட்டமன்றம் தொடங்க இருக்கிறது. சபாநாயகரும் சட்டமன்ற செயலாளரும் இதற்காக ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர். தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இந்த வருடம் திமுக அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிப்பாரா அல்லது கடந்த 2023 ஜனவரி 9 ஆம் தேதி நடந்தது போல சில பகுதிகளை சேர்த்து, சில பகுதிகளை நீக்கி வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தொடர்ந்து அரசோடு மோதல் போக்கில்தான் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர். இந்த நிலையில் ஆளுநரின் திட்டம் என்னவாக இருக்கும் என்று முதலமைச்சர் அதிகாரிகளிடம் உரையாடும் போது விசாரித்திருக்கிறார்.

‘கடந்த முறை போல இந்த முறை ஆளுநர் நடந்துகொள்ளமாட்டார் என்று நம்பலாம். ஏனென்றால் நாம் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றபோது முதலமைச்சருடன் இணக்கமாக செல்லுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், சென்ற வருடம் போல இந்த முறையும் செய்தால் அது திமுகவுக்கே அரசியல் ரீதியான ஆதாயமாக இருக்கும் என்று ஆளுநருக்குத் தெரியும். அதனால், இந்த முறை அப்படி செய்யமாட்டார்’ என்று முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

அதேநேரம் ஆளுநர் மாளிகையிலும் இது தொடர்பான ஆலோசனைகள் சில நாட்களாக நடந்து வருகின்றன. ஆளுநர் உரை தொடர்பாக கடந்த வருடம் பின்பற்றிய நடைமுறையை பின்பற்றலாமா அல்லது சில நாட்களுக்கு முன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அம்மாநில சட்டமன்றத்தில் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் மட்டும் வாசித்து ஒன்றே கால் நிமிடத்தில் முடித்துவிட்டாரே… அதை பின்பற்றலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் நடந்திருக்கின்றன.

ஆளுநர் மாளிகைத் தரப்பில் விசாரித்தபோது, ‘ஆளுநர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவரது வழக்கமான பாணியில் சில நடவடிக்கைகள் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்பது அரசியல் சாசனத்தின் படி நடக்கும் ஒரு நிகழ்வு. அது சாதாரண நிகழ்வாக நடந்து முடியுமா அல்லது கடந்த வருடம் போல சர்ச்சையாகுமா என்பது பிப்ரவரி 12 ஆம் தேதி தெரியும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவையை நடுநிலையுடன் வழிநடத்திய ஓம் பிர்லா: பாராட்டிய மோடி

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி

+1
0
+1
3
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0