ஸ்பெயினில் இருந்தபடியே தமிழ்நாடு அரசின் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரை, பட்ஜெட் ஆகியவை பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆய்வும், ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார்.
”பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன்” என்று ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.
பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்ப இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயினில் இருந்தபடியே முக்கிய அரசு அலுவல்களையும், அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று (பிப்ரவரி 4) தமிழக செய்தித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
“ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்… பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளதாலும், அதனைத் தொடர்ந்து நிதி நிலை அறிக்கை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாலும், ஆளுநர் உரையின் வரைவில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து நிதித் துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர்- கூடுதல் தலைமைச் செயலாளர் , மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
–வேந்தன்
Video: ”ரொம்ப தப்புங்க” ஸ்டோக்ஸின் செய்கையால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
புதுச்சேரி எம்பி வேட்பாளர்: பாஜகவுக்கு ரங்கசாமியின் நிபந்தனை!