அரசியல் களத்தில் ஆளுநர் இறங்கக்கூடாது : உச்ச நீதிமன்றம்!

அரசியல்

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிரா ஆளுநர் அழைத்தது நியாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று (மே 11) தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர்.

இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவிற்கு அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டார்.

ஆனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னால் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சிவசேனாவின் பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பாக மொத்தம் 4 முக்கிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 16 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஒரு மனு தாக்கல் செய்தது. கிளர்ச்சி எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய கேட்டு உத்தவ் தாக்கரே தரப்பு ஒரு மனு தாக்கல் செய்தது. 

இந்த வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் சேர்த்து வழக்கு விசாரணை நடைபெற்று, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 11) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவை ஆளுநர் அழைத்தது நியாயமில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் .சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

அதாவது ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த 34 எம்எல்ஏக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைத்தது தவறானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்

ஒரு மாநில அரசாங்கத்தின் தலைவரான ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அரசியலமைப்பு வரம்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அரசியல் களத்தில் ஆளுநர் இறங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உத்தவ் தாக்கரே தானாக முன்வந்து ராஜினாமா செய்திருப்பதாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாததாலும் இப்போது ஏக்நாத்  ஷிண்டேவை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது. அதன்படி கடந்த ஜூன் மாதத்திற்கு முந்தைய நிலைக்கும் உத்தரவிட நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

அதாவது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே பதவி விலகியதால் அவரை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வாய்ப்பில்லை என்று அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், “ஒருவேளை நான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் ராஜினாமா செய்தது தவறாக கூட இருக்கலாம். ஆனால் துரோகிகளிடம் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், ஏக்நாத்  ஷிண்டேவின் தற்போதைய அரசுக்கு கொஞ்சமாவது நீதி நியாயம் இருந்தால் நான் செய்ததைப் போல் இந்த அரசும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து  ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா ஆதரவாளர்கள் புனேவில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தீர்ப்பு குறித்து ஏக்நாத்  ஷிண்டே கூறுகையில், “ஜனநாயகத்தில் பெரும்பான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாங்கள் உருவாக்கிய அரசு சட்டரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

பிரியா

மோக்கா புயல்: தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இரு உயிர்களை காப்பாற்றிய ஐபிஎஸ் அதிகாரி! 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *