ஆளுநர் விவகாரம்…விளக்கம் தந்த தமிழக அரசு…சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

அரசியல்

தமிழக அரசு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அவமரியாதை செய்ததாகவும், ஆளுநர் பேசிய பொங்கல், புத்தாண்டு வாழ்த்து வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் நேற்று (ஜனவரி 10) செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், ஆளுநரின் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கவில்லை என்றும் உரையில் சில பத்திகளை ஆளுநர் நீக்ககூறி தமிழக அரசிடம் கூறியதாகவும், அந்த பத்திகளை விடுத்து, தமிழக அரசு அவரை ஆளுநர் உரை வாசிக்க சொன்னதாகவும் வெளியாக தகவல்கள் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “அரசியலமைப்புச்‌ சட்டத்தின்படி ஆளுநர்‌ உரை என்பது Article 176-ன்‌ கீழ்‌ ஆண்டின் முதல்‌ சட்டசபை கூட்டத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ ஒன்றாகும்‌. இந்த உரை மாநில அரசின்‌ கொள்கைகளையும்‌, கோட்பாடுகளையும்‌, திட்டங்களையும்‌, சாதனைகளையும்‌ எடுத்துரைக்கும்‌ ஒரு உரை ஆகும்‌.

இந்த உரை மீது ஆளுநர்‌ உரைக்குப்‌ பின்‌, அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள அரசின்‌ கருத்துகள்‌ மீது தீவிர விவாதங்கள்‌ நடைபெறும்‌. அனைத்துக்‌ கட்சித்‌ தரப்பினரும்‌, ஆளுநர்‌ உரையின்‌ மீது தங்களது கருத்துகளைத்‌ தெரிவித்து விவாதிப்பார்கள்‌.

எதிர்க்கட்சித்‌ தலைவரும்‌ அவரது உரையை இக்கூட்டத்தில்‌ நிகழ்த்துவார்‌. அதன்பிறகு, முதலமைச்சர்‌ அவர்களும்‌ அவரது பதிலுரையை நிகழ்த்துவார்‌.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு தயாரிக்கும்‌ இந்த உரையை ஆளுநர்‌ வாசிக்க வேண்டும்‌ என்பதே மரபு. இந்த உரையில்‌ ஆளுநரின்‌ தனிப்பட்ட கருத்துகளுக்கோ, ஆட்சேபனைகளுக்கோ எவ்வித இடமும்‌ இல்லை. மேலும்‌, இவ்வுரை அவரது தனிப்பட்ட உரையுமல்ல. அரசின்‌ உரையே ஆகும்‌. இந்த நடைமுறையை தொடர்ந்து பல ஆளுநர்கள்‌ தமிழ்நாட்டின்‌ சட்ட சபையில்‌ கடைபிடித்து வந்துள்ளனர்‌.

“வரப்புயர நீர்‌ உயரும்‌ நீர்‌ உயர நெல்‌ உயரும்‌…” என்கிற அவ்வையாரின்‌ வரிகளையும்‌, பாரதியாரின்‌ “வாழிய செந்தமிழ்‌, வாழ்க நற்றமிழர்‌, வாழிய பாரத மணித்திருநாடு” என்கிற வரிகளும்‌ நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

governor rn ravi walkout tamil nadu government explanation

அரசு தயாரித்த ஆளுநர்‌ உரையில்‌ “வரப்புயர நீர்‌ உயரும்‌ நீர்‌ உயர நெல்‌ உயரும்‌…” என்கிற வரிகள்‌ சேர்க்கப்படவில்லை. அவற்றை சேர்க்கவேண்டும்‌ என்று ஆளுநர்‌ அலுவலகத்திலிருந்து எந்தவிதமான கோரிக்கைகளும்‌ பெறப்படவில்லை. ஆதலால்‌ இவை நீக்கப்பட்டுள்ளன என்று கூறுவது சரியல்ல.

“வாழிய செந்தமிழ்‌, வாழ்க நற்றமிழர்‌, வாழிய பாரத மணித்திருநாடு ” என்கிற பாரதியாரின்‌ கவிதை வரிகளை பொருத்தவரை அரசு தயாரித்த உரையில்‌ சேர்க்கப்பட்டுள்ளன. ஆதலால்‌ இவை நீக்கப்பட்டுள்ளது என்று சொல்வது சரியன்று.

ஆளுநர்‌ தெரிவித்த புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ நல்வாழ்த்துகள்‌, அச்சிடப்பட்ட உரையின்‌ பத்தி 1 மற்றும்‌ பத்தி 67ல்‌ இடம்‌ பெற்றிருந்தன. எனவே, அவை நீக்கப்பட்டன என்று கூறுவது சரியன்று.

மேலும்‌, ஆளுநர்‌ அவர்கள்‌, அரசு தயாரித்த ஆளுநர்‌ உரையில்‌ ஆட்சேபனைக்குரிய பகுதிகளும்‌, அரசு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும்‌ பகுதிகளும்‌ இருப்பதால்‌, சில பத்திகளை வாசிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால்‌ பத்தி 2ல்‌ அண்மையில்‌, பிரதமரின்‌ பொருளாதார ஆலோசனைக்‌ குழு வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக்‌ குறியீட்டு அறிக்கையில்‌ 63.3 புள்ளிகளைப்‌ பெற்று, இந்தியாவின்‌ பெரிய மாநிலங்களில்‌ தமிழ்நாடு முதலிடம்‌ பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தி 35ல்‌, ரூ.28,232 கோடி ரூபாய்‌ அந்நிய முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது, ஒரு தரவின்‌ அடிப்படையிலான உண்மைத்‌ தகவலாகும்‌. இது, எந்த பிற மாநிலங்களையும்‌ ஒப்பிட்டு, குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான உண்மை நிகழ்வுகளையே ஆளுநர்‌ அவர்கள்‌ தனது உரையில்‌ வாசிக்கவில்லை. தரவுகளின்‌ அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்ட உரையின்‌ மேற்சொன்ன பகுதிகளை ஆளுநர்‌ வாசிக்கவில்லை.

வரைவு ஆளுநர்‌ உரை அவரது ஒப்புதலுக்காக ஜனவரி 6-ஆம்‌ தேதி காலை சுமார்‌ 11.30 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில்‌, ஆளுநர்‌ அலுவலகத்தின்‌ ஒப்புதலுடன்‌ சிறிய எழுத்துப்‌ பிழைத்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6-ஆம்‌ தேதி மாலை சுமார்‌ 4.30 மணிக்கு மீண்டும்‌ திரும்ப அனுப்பப்பட்டது. இதன்பின்‌, ஆளுநர்‌ அலுவலகத்திலிருந்து, சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கூறினர்‌. ஆளுநர்‌ அலுவலகத்துடன்‌ கலந்தாலோசித்து அத்திருத்தங்களை மேற்கொண்டு, இறுதியாக ஒரு உரை ஜனவரி 7ஆம்‌ தேதி இரவு சுமார்‌ 8.00 மணிக்கு அனுப்பப்பட்டது.

ஜனவரி 8-ஆம்‌ தேதி, காலை சுமார்‌ 11.30 மணியளவில்‌ ஆளுநர்‌ ஒப்புதலுடன்‌ கோப்பு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஆளுநர்‌ சில பத்திகளை நீக்கக்‌ கூறுமாறு கோரியபோது, உரை அச்சிற்குச்‌ சென்றுவிட்டது என்று கூறியதும்‌, எனவே, தாங்கள்‌ உரையை வாசிக்கும்போது, அவற்றைத்‌ தவிர்த்து வாசியுங்கள்‌ என்ற வதந்தி தவறாகப்‌ பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும்‌ உண்மைக்குப்‌ புறம்பானது. அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும்‌ நடைபெறவில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு ஆண்டும்‌ ஆளுநர்‌ உரையாற்றிய நாளின்‌ அதிகாலையிலேயே (சுமார்‌ 12.30 மணியளவில்‌) உரை அச்சிடுவதற்கு அனுப்பப்படும்‌. இதுதான்‌ கடைப்பிடிக்கப்படும்‌ மரபு. இவ்வாண்டும்‌ அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது. 8-ஆம்‌ தேதி காலை சுமார்‌ 11.30 மணியளவில்‌ ஆளுநரின்‌ ஒப்புதல்‌ பெறப்பட்ட கோப்பு பெறப்பட்டது. ஆனால்‌, அரசின்‌ சார்பில்‌ ஆளுநர்‌ உரை 9-ஆம்‌ தேதி அதிகாலை சுமார்‌ 12.30 மணியளவிலேயே அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.

எனவே உண்மை நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், தவறான தகவல்களையும் வதந்திகளையும் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களில் பரப்புவது சரியல்ல.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

துணிவு வாரிசு ரிலீஸ்: ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *